சதீஸ் நீக்கத்திற்கு இடைக்கால தடை நீடிப்பு!

0

வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கும் கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய கட்டாணை வரும் 15ஆம் திகதிவரை இன்று நீடிக்கப்பட்டது.

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உள்பட கட்சியின் செயலாளர், பொருளாளர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மனுவில் அவர்களால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி கேசவன் சயந்தன் இன்று மன்றில் முன்னிலையானார்.

எனினும் சட்டத்தரணி பதிலியை சமர்ப்பிக்கத் தவறியதால் அதற்கு தவணை வழங்கப்பட்டு வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்துக்கு நீதிமன்றம் கட்டாணை விதித்தது.

தமிழர் விடுதலைக் கழகம் (ரெலோ) கட்சியைச் சார்ந்த கந்தசாமி சதீஸ், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ரெலோவின் கட்டுப்பாடுகளிலிருந்து விலகிச் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் அந்தக் கட்சியின் பரிந்துரையின் பேரில் சதீஸை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அந்தக் கட்சி நீக்கியது.

இந்த நடவடிக்கையின் ஊடாக அவரை நகர சபை உறுப்புறுமையிலிருந்து நீக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளருக்கும் தமிழ் அரசுக் கட்சி சார்பில் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் கட்சியின் தலைமை எடுத்துள்ள தீர்மானத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தும் அதனை வெற்றும் வறிதானதுமாக்கும் கட்டளையை வழங்கக் கோரியும் கந்தசாமி சதீஸ் சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனால், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் நீதிப் பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மனுவின் பிரதிவாதிகளாக தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, செயலாளர் கி.துரைராசசிங்கம் மற்றும் பொருளாளர் பொ.கனகசபாபதி ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அந்த மனு கடந்த 18ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்ப மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் கட்டளை வழங்கினார்.

மனுதாரரின் இடைக்கால நிவாரணமான, தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கும் பிரதிவாதிகளின் அறிவித்தலுக்கு கட்டாணை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற மாவட்ட நீதிமன்றம், வரும் 14 நாள்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியது.

மனு மீதான விசாரணை இன்று 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.<br />
இந்த நிலையில் மனு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. பிரதிவாதிகள் சார்பான சட்டத்தரணி கேசவன் சயந்தன் மன்றில் முன்னிலையானார். எனினும் பதிலியை அவர் சமர்ப்பிக்கவில்லை.

அதனால் மனு மீதான விசாரணை வரும் 15ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. அன்றுவரை வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கும் கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை விதித்து யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் கட்டளையிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here