இந்த மோசடியை மறைக்கவா மட்டக்களப்பில் சமுர்த்தி வங்கி எரிக்கப்பட்டது?

© தமிழ்பக்கம்

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவு சமுர்த்தி வங்கி மோசடிகளை பற்றி தமிழ்பக்கம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. ஊடகங்களால் ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டப்படும் மோசடிகள், அரச கணக்காய்வு விசாரணை அறிக்கைகள் என பல ஆதாரங்கள் கிடைத்தாலும், மோசடியில் ஈடுபடுபட்ட யாருமே தண்டிக்கப்படவில்லை.

மட்டக்களப்பு சமுர்த்தி மோசடி, உள்ளிருக்கும் புற்றுநோயைப் போல அந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை எப்படி அழித்தது, எந்தெந்த வங்கியில், எந்தெந்த உத்தியோகத்தர்கள் மோசடியில் ஈடுபட்டார்கள் என்பதை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். எனினும், மோசடியில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் அனைவரும் விசாரணையை எதிர்கொள்ளவில்லை.

எனவே, அவசியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய சமுர்த்தி வங்கி ஊழல் ஒன்று தொடர்பாக இன்னும் சில தகவல்களை வெளியிடுகிறோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம், இயற்கை அனர்த்தம் என்பற்றால் பாதிக்கப்பட்டதுடன், பின் தங்கிய நிலையில் காணப்படும் பிரதேச செயலக பிரிவுகளில் கிரான் பிரதேச செயலகப் பிரிவும் ஒன்று.

இங்கு படுவான்கரையில் வாழும் மக்கள் வாழ்வாதாரமாக விவசாயம், கால் நடை வளர்ப்பு,  மீன்பிடி, கூலித் தொழிலை செய்து வருகிறார்கள். சில கிராமங்களில் இருந்து அரசசேவைக ஆறுகளை கடந்தும் பயணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.

அந்த பிரதேசங்களின் கல்வியறிவு மட்டம், பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும் வீதம் குறைவானது. போசாக்கின்மை, சுகாதார வசதியின்மை என்பவற்றுடன் பாடசாலைலிருந்து இடைவிலகுதல் அதிகமாக உள்ளது.

இந்த மக்களே விடுதலை போராட்டம் இடம் பெற்ற காலப்பகுதியில் போராட்டத்திற்கு பல வழிகளிலும் உதவியுடன், பல மாவீர குடும்பங்களும் உள்ளன.

அத்துடன் இயற்கை வனவளம் நிறைந்த பிரதேசமும் இப்பிரதேச செயலகப்பிரிவுக்குள்ளே அடங்கும்

சாதகங்களையும், பின்னடைவுகளையும், எதிர்மறை கணிப்பீடுகளையும் கொண்ட மக்கள் படுவான்கரை பக்கமாக வாழ்வது போல, எழுவான்கரையில்-திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியினை அண்டிய பிரதேசத்தில் வாழும் மக்கள் மீன்பிடி, விவசாயம், சுய தொழில்களை செய்கிறார்கள்.

இவற்றிலும் மிகவும் வறிய நிலையில் அதிக குடும்பங்கள் உள்ளனர்.  அவர்கள் அரசாங்க உதவிகளை எதிர பார்த்து வாழ்கிறார்கள். அவர்களை பயன்படுத்திக் கொண்ட அந்த ஊரைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகம் பெற்ற அதிகாரிகள் தொடர்ச்சியாக- 10 வருடங்களுக்கு மேலாக- பல மோசடிகளை செய்து வருகிறார்கள். இதை யாருமே கவனத்தில் கொள்வதில்லை.

அப்பிரதேசத்திற்கு கடமைக்கு வரும் உயரதிகாரிகளும், இந்த மோசடிக்கும்பலின் மூலம் சில சலுகைகளையும், அவர்கள் மூலம் சில அரசியல் வாதிகளின் உதவியினையும் பெற்றுக் கொண்டு அரச காணி மோசடி, மண் மரம் கடத்தல் போன்றவற்றை திரைமறைவில் ஆதரித்து வந்திருக்கிறார்கள்.

நேர்மையாக மக்கள் சேவை செய்யும் அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டு, ஊழல் மோசடிகளை மேற்கொள்பவர்கள், அரசியல் செல்வாக்கில் அதிகாரம் செலுத்துவதே நடந்து வந்திருக்கிறது.

கடந்த 2018. 09. 02ம் திகதி சந்திவெளி சமுர்த்தி வங்கிக்கு தீவைத்தது இந்த ஊழல் மோசடியின் ஒரு விளைவுதான். ஆவணங்கள் இருந்த அறையை முழுமையாக அழிக்க நினைத்தபோதும், அது கைகூடவில்லை.

சமுர்த்தி வங்கியின் ஆவணங்களிருந்த அறைக்கு யார், ஏன் தீவைத்தார்கள் என்பதை கண்டறிவதில் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதன் காரணம் என்ன? ஏதாவது அரசியல் அழுத்தத்தால் அதிகாரிகள் செயற்பட முடியாமல் இருக்கிறார்களா?

இந்த வங்கியின் ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டதை, மாவட்டசெயலக கண்காணிப்பு முகாமையாளர் ந.விஸ்வலிங்கம் தனது அறிக்கையில் ஆதாரபூர்வகமாக குறிப்பிட்டுள்ளார். 2015/09/02 திகதியிடப்பட்ட அவரது அறிக்கை தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சந்திவெளி சமுர்த்தி வங்கியில் 2010 ஆண்டு தொடக்கம் இடம் பெற்ற ஊழல் மோசடிகள், வங்கி அரச சுற்று நிருபங்களுக்கு முரணாக செயற்பட்டதற்கான ஆதாரங்களை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அந்த அறிக்கையை தமிழ்பக்கம் ஏற்கனவே வெளியிட்டுமிருந்தது.

அப்போது  கடமையில் இருந்த வங்கி முகாமையாளர், வங்கி சங்க தலைவி உட்பட ஆறு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேர்ந்து, சமுர்த்தி பயனாளிகளான ஏழை மக்களின் பெயரில் கடனை பெற்றது… சேமிப்பு பணம், வாழ்வாதார உதவியில் மோசடிகளை செய்தது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், கடந்த மூன்று வருடங்களாக உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்ட உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் கடமையில் இருந்த நிலைமையிலேயே, வங்கியின் ஆவணங்கள் இருந்த அறை தீவைக்கப்பட்டது.

உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு, அந்த உத்தியோகத்தர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால், வீணாண குழப்பங்களையும், குற்றச்சாட்டுக்களையும் தவிர்த்திருக்கலாம். இந்த தீவைப்பு ஆவணங்களை அழிக்கும் முயற்சியென்ற அபிப்பிராயம் சமூகத்தில் ஏற்பட்டதும், அதனால் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டிருந்த ஊழியர்கள் அதிக நெருக்கடிக்கு உள்ளாவதும், அதிகாரிகளின் அசமந்தத்தினாலேயே ஆகும்.

2015 இல் நல்லாட்சி அரசாங்கம் உருவாகியபோது வீடமைப்பு சமுர்த்தி பிரதி அமைச்சராக மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த அமீர் அலி நியமிக்கப்பட்டார். அப்போது சமுர்த்தி பயனாளி அல்லாதோருக்கும் திரிய சவிய கடன் எனும் பெயரில் 4% வட்டிக்கு ரூபா 100,000 கடன் வழங்கப்பட்டது. அடிப்படை தேவையான வீடு மற்றும் சிறு வியாபாரத்திற்காக அந்த கடன் திட்டம் உருவாக்கப்பட்ட போதும், மட்டக்களப்பில்  பிரதி அமைச்சரின் சிபாரிசில், அவரால் வழங்கப்பட்ட பெயர் விபரத்தில் உள்ளவர்களிற்கும் வழங்கப்பட்டது. பயனாளி தேர்வை அதிகாரிகள் செய்யாமல், அரசியல்வாதிகள் செய்தால் அந்த பட்டியலில் உள்ளவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என்றும் பொருள்படுமல்லவா. இந்த கடன்திட்டம் குறித்த விரிவான செய்தியை விரைவில் வெளியிடுவோம்.

இந்த கடன் திட்டத்தில் பிரதி அமைச்சரின் சிபாரிசில், முன்னாள் பிரதேச செயலாளரின் அனுமதிக்கமைய சமுர்த்தி பயனாளிகள் அல்லாத 11 பேர்- அரசியல் வாதிகளின் அமைப்பாளர்களுக்கு- ஏற்கனவே சமுர்த்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாக நிருபிக்கபட்ட உத்தியோகத்தர்களை பிணையாளிகளாக கையொப்பம் இட்டு வங்கியில் கடன் வழங்கப்பட்டது. இந்த  செலுத்தப்படவில்லை. பினையாளிகளிடமிருந்து அறவீடு செய்யப்படவுமில்லை.

இதனை அறிந்து கொண்ட கணக்காய்வு ஆணையாளர் நாயக திணைக்கள அதிகாரிகள், சமுர்த்தி தலைமையக முகாமையாளரை அழைத்து விபரங்களை பெற்றுக்கொண்டு குறித்த கடனுக்கு பினையாளிகளாக கையொப்பம் இட்டவர்களிடமிருந்து அறவிட்டுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளருக்கு அறிவித்திருந்த நிலையிலும், பணம் அறவிடப்படவில்லை.

2010 ஆண்டிருந்து  பொது மக்களின் வைப்பு பணம், வாழ்வாதார திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆடுகளில் மோசடி செய்ய, விசேட கிராம அபிவிருத்தி திட்டத்தினை செயற்படுத்தாமல் செய்த பல மோசடிகளை செய்த ஒரு உத்தியோகத்தர் இந்த வருடமும் மோசடியில் ஈடுபட்டு சிக்கி கொண்டார்.  2018/02/06 திகதியிலிருந்து கள அறவீடாக பெற்ற ரூபா 20,400 ஐ வங்கியில் வைப்புச் செய்யாமல் இருந்த மோசடி கண்டு பிடிக்கப்பட்டது.

உரிய மோசடிக்கு நடவடிக்கையும் தண்டப்பணத்தினையும் அறவிடும்படி மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரினால் பிரதேச செயலாளருக்கு அறிவித்தும் (2018/07/26 திகதி)பிரதேச செயலாளர் உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை.  2018/09/02  அன்று சந்திவெளி சமுர்த்தி வங்கிக்கு தீ வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த தீவிபத்து திட்டமிடப்பட்டதா, தற்செயலானதா, பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதற்கு விடை கண்டுபிடிக்கப்படாத நிலையில்… மட்டக்களப்பில் அதிக மோசடிகள் நடந்ததாக அந்த வங்கி அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில்… சந்தேகங்களையும், ஊகங்களையும் அதிகாரிகளின் அசமந்தம் அல்லது மோசடி உத்தியோகத்தர்களை காப்பாற்றும் மனப்போக்கே அதிகப்படுத்துகிறது. ஒருவேளை, இந்த தீவிபத்து வேறு பின்னணியுடையதாக இருந்தாலும், மோசடி விசாரணையை தாமதப்படுத்தி, குறித்த உத்தியோகத்தர்கள் மீது வீணாண சந்தேக பார்வையை விழ வைத்த குற்றச்சாட்டும் உரிய அதிகாரிகளையே சாரும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here