தமிழ் அரசியல்கைதிகள் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாகவும், அரசியல்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பரவலான கவனயீர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு அங்கமாக, இன்று வவுனியாவில் ஒரு கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
பொதுஅமைப்புக்களின் பெயரில் நடந்த இந்த போராட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினரே அதிகளவில் கலந்து கொண்டிருந்தனர். அந்த கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் எம்.பி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியாவில் இப்படியொரு முக்கியமான போராட்டம் நடந்தும், அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் பிரமுகர் ப.சத்தியலிங்கம், ரெலோவின் வினோநோகராதலிங்கம், புளொட்டின் சந்திரமோகன் உள்ளிட்ட பிரமுகர்கள் இருந்தும், யாருமே இன்றைய கூட்டத்திற்கு சென்றிருக்கவில்லை.
சிலநாட்களின் முன்னர், வவுனியாவில் பொதுஅமைப்புக்களின் ஏற்பாட்டில் நடந்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எல்லா கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன. மாவை சேனாதிராசா கூட கலந்து கொண்டிருந்தார்.
அப்படியிருக்க, இன்றைய போராட்டத்தில் ஏன் கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை?
இந்த விசயத்தை துருவ தொடங்க, சுவாரஸ்யமாக- சோகமான- ஒரு தகவல் கிடைத்தது. சுவாரஸ்யம், சோகம் என இரண்டு வகைக்குள்ளும் அந்த தகவலை அடக்கலாம்.
முதலில் விசயத்தை சொல்லிவிடுகிறோம்.
இன்று காலை வரை கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளிற்குள், போராட்டத்திற்கு போவது சம்பந்தமான எந்த முடிவும் இல்லை. இன்னும் வெளிப்படையாக சொன்னால், அதைப்பற்றி யாரும் பேசியிருக்கவேயில்லை. இன்று காலையில்தான், வவுனியாவிலுள்ள தமிழரசுக்கட்சியின் மிக செல்வாக்கான புள்ளி ஒரு தொலைபேசி அழைப்பை ரெலோ, புளொட் பிரமுகர்களிற்கு எடுத்தார்.
“இன்றைய போராட்டத்தில் எமது கட்சி கலந்துகொள்வதாக உத்தேசமில்லை. அரசியல்கைதிகளிற்காக சில நாட்களின் முன்னர் நடந்த போராட்டத்தில் எமது கட்சி தலைவர் மாவை சேனாதிராசா கூட கலந்து கொண்டிருந்தார். அதில் கலந்துகொண்ட சிலர் எமது கட்சி தலைவருக்கு எதிராகவும், சம்பந்தன், சுமந்திரனுக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினார்கள். பொது இடங்களில் எமது தலைவர்களை விமர்சிப்பது நல்லதல்ல. அப்படியொரு சம்பவம் நடக்காமல் ஏற்பாட்டாளர்கள்தான் பார்த்திருக்க வேண்டும். அவர்கள் அதை செய்யவில்லை. அதனால் இன்றைய போராட்டத்திற்கு நாம் செல்வதில்லையென முடிவெடுத்துள்ளோம்“ என்பதே அவரது தகவல்.
தாய்க்கட்சியான தமிழரசுக்கட்சியே செல்லவில்லையென்றதும், ரெலோ, புளொட் பிரமுகர்கள் தமது கட்சிக்குள் பேசிவிட்டு சொல்வதாக சொன்னார்களாம். இறுதியில் அவர்களும் கலந்துகொள்ளவில்லை. அவர்களின் கட்சியும் அனுமதிக்காமல் இருந்திருக்கலாம்.
இதுதான் இன்று காலையில் நடந்த சம்பவம்.
சரி, கடந்த போராட்டத்தில் அப்படியென்ன நடந்தது?
அன்று, பல கட்சிகளும் தனித்தனியாக தமது பதாகைகளை பிடித்துக் கொண்டு பேரணியாக சென்றனர். ஈ.பி.டி.பியும், தமிழரசுக்கட்சியும் நெருக்கமாக செல்லும் சூழல் ஏற்பட்ட சமயத்தில், ஈ.பி.டி.பி குழுவிலிருந்தவர்கள் சம்பந்தன், மாவை, சுமந்திரனுக்கு எதிராக கோசமெழுப்பினார்கள். தமிழரசுக்கட்சியினரும் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக கோசமெழுப்ப, அங்கு பரபரப்பான நிலைமையேற்பட்டது.
விசயம், ஏற்பாட்டாளர்களின் காதிற்கு செல்ல, ஓரிரு நிமிடங்களிலேயே அவர்கள் தலையிட்டு, இரண்டு தரப்பையும் சமரசம் செய்தனர். “இது பொது போராட்டம். இங்கு கட்சி சண்டைகளை வைக்க வேண்டாம்“ என கறாராக சொல்லி, இரண்டு தரப்பையும் கட்டுப்படுத்தினர்.
இந்த காரணத்தை வைத்தே, இன்றைய அரசியல் கைதிகளிற்கு ஆதரவான போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செல்லவில்லை.
நமக்காக போராடி சிறையிலிருப்பவர்களின் விடுதலைக்கான ஒரு போராட்டத்தை கூட ஒற்றுமையாக செய்ய முடியாத இனம் என்ற சோகம் எழும் அதேநேரம், இப்படியான சின்னச்சின்ன காரணங்களிற்காகவே ஒரு முக்கியமான போராட்டத்தை ஒரு கட்சி தவிர்க்கிறதென்றால், தேர்தல் சமயத்தில் வாக்கு வேட்டைக்கு செல்லும் சமயங்களில் யாராவது நார்நாராய் கிழித்து தொங்கவிடுவதை போல கேள்வி கேட்டால், கோபித்துக் கொண்டு, தேர்தலில் இருந்தே பின்வாங்கி விடுவார்களா என்ற சுவாரஸய்மான கேள்வியும் எழுகிறதல்லவா?