குவைத் அதிகாரியின் பர்ஸை திருடிய பாகிஸ்தான் நிதித்துறை செயலாளர்: சிசிடிவி காட்சியால் அவமானம்

இஸ்லாமாபாத்தில் நடந்த பாகிஸ்தானின் அன்னிய முதலீடு தொடர்பான கூட்டத்தில் குவைத் நாட்டு அதிகாரியின் பர்ஸை பாகிஸ்தான் நிதித்துறையின் முதலீட்டுச் செயலாளர் திருடியது கண்காணிப்பு கமிராவில் கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் காட்சிகளையும் செய்திகளையும் பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான், சாமாடிவி ஆகியவை வெளியிட்டு அசிங்கப்படுத்தியுள்ளன.

இஸ்லாமாபாத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் குவைத் நாட்டு அதிகாரிகளை அழைத்து பாகிஸ்தான் அரசு முதலீடு திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில் பாகிஸ்தானின் நிதி அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகள், குவைத் நாட்டின் நிதித்துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்கள்.

இந்தக் கூட்டத்தின் இடையே அனைவரும் விருந்துக்காக வெளியே சென்றனர். அப்போது, குவைத் நாட்டு அதிகாரிகள் அமர்ந்திருந்த மேஜை மீது ஒரு பர்ஸ் வைக்கப்பட்டு இருந்தது. இதை பாகிஸ்தான் நிதிஅமைச்சகத்தின் முதலீடு வாரியத்தின் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி பார்த்துவிட்டார்.

தன்னைச் சுற்றியும், அறையில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த அந்த அதிகாரி சில வினாடிகளில் அந்த பர்ஸை எடுத்து தனது கோட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு நடையைக் கட்டினார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமிராவில் பதிவானது. ஆனால், அங்கு சிசிடிவி கமிரா இருந்தது அந்த அதிகாரிக்கு தெரியாது.

இதையடுத்து சிலமணி நேரத்தில் அந்த குவைத் நாட்டு அதிகாரி தன்னுடைய பார்ஸ்(வாலட்) காணாமல் போய்விட்டதை அறிந்து அனைவரிடமும் விசாரித்தார். தாங்கள் கூட்டம் நடத்திய இடத்திலும் தேடினார். ஆனால், எங்கு தேடியும் பர்ஸ் கிடைக்கவில்லை. இதையடுத்து, குவைத் நாட்டு அரசு சார்பில் அதிகாரியின் பர்ஸ் காணாமல் போனது குறித்து புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகார் கொடுக்கும் முன் அந்தக் கூட்டம் நடந்த பொருளாதார விவகார பிரிவு அலுவலகத்தை அதிகாரிகள் சல்லடைபோட்டு தேடுவதுபோல் தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை. இந்த தேடுதல் வேட்டை நடக்கும் போது, பர்ஸை எடுத்த பாகிஸ்தான் அதிகாரி பார்த்துக்கொண்டுதான் இருந்தார். ஆனால், அதிகாரிகள் யாரும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யவில்லை.

இதையடுத்து அதிகாரப்பூர்வமாகப் புகார் கொடுக்கப்பட்ட பின் பொலிஸாரும், பாதுகாப்புப்படையினரும் சிசிடிவ கமிராவை ஆய்வு செய்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அதில் பாகிஸ்தான் முதலீட்டுத்துறை செயலாளர் ஜரார் ஹைதர் கான் பர்ஸை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது கோட் பாக்கெட்டில் போடுவது கண்டறியப்பட்டது. இப்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானின் டான் பத்திரிகையில் இந்தச் செய்தி வெளியானது, மேலும் சமா தொலைக்காட்சியில் இந்தக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதால், ஆளும் இம்ரான்கான் அரசுக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று மட்டும் பாகிஸ்தான் அரசு சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.

ஆனால், இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானபின் அந்நாட்டு நெட்டிசன்கள் பாகிஸ்தான் அரசையும், அதிகாரியையும் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here