திருகோணமலையில் பௌத்த பிக்குகள் ஏற்படுத்திய கலவரம்!


திருகோணமலை, புல்மோட்டை 13ம் கட்டை குஞ்சுக்குளம் பகுதியில் முஸ்லிம் மக்களின் விவசாய நிலத்தில் பௌத்த பிக்குகள் சிலர் அறநெறி பாடசாலை அமைக்கப் போவதாக அடாத்தாக நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொலிசாரின் தலையீட்டையடுத்து, பௌத்த பிக்குகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த பகுதியில் நீண்டகாலமாக விவசாயத்தில் ஈடுபட்ட முஸ்லிம் மக்களிற்கு 1966ஆம் ஆண்டு நில அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. பின்னர் யுத்தம் தீவிரமடைந்ததையடுத்து, அங்கிருந்து அவர்கள் வெளியேறி, அந்த பிரதேசங்கள் பற்றைக்காடுகளாகின.

அந்த பிரதேசம் வனபரிபாலான திணைக்களத்திற்குரியதாக கூறி, தற்போது பொதுமக்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொதுமக்களின் விவசாய நிலத்தில் 80 பேர்ச் காணியில் பௌத்த அறநெறி பாடசாலை அமைக்க, புல்மோட்டை அரிசிமலை பௌத்த பிக்குவிற்கு கொழும்பு வன பரிபாலன அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர். குறித்த அனுமதிப்பத்திரத்தில், அந்த காணி தமது திணைக்களத்திற்குரியதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து, கடந்த சில தினங்களின் முன்னர் டோசர் இயந்திரத்தின் மூலம் காணியை துப்பரவு செய்ய பௌத்த பிக்குகள் முயற்சித்தனர். காணி உரிமையாளரான பொதுமக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். பொலிசார் தலையிட்டு, துப்பரவு பணியை தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று (28) மீண்டும் டோசர் இயந்திரங்களுடன் சட்டவிரோதமாக துப்பரவு பணியில் பௌத்த பிக்குகள் ஈடுபட்டனர். இதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் இரண்டு தரப்பிற்குமிடையில் முறுகல் ஏற்பட்டது.

பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து பௌத்த பிக்குள் அங்கிருந்து வெளியேறி சென்றனர்.

எனினும், பௌத்த பிக்குகள் மீண்டும் வரலாமென்பதால் அங்கு குடில்கள் அமைத்து இரவு பொதுமக்கள் தங்கியிருந்தார்கள். இதனை கேல்வியுற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உள்ளிட்ட உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், பள்ளிவாயல்களின் தலைவர்கள் சென்றிருந்தனர்.

அதிகாலை 3.30 மணியளவில் டோசர் இயந்திரங்களுடன் மீண்டும் பௌத்த பிக்குள், சிங்களவர்கள் துப்பரவு பணிக்காக வந்தனர். அங்கு மக்கள் காத்திருந்ததால் அவர்களால் துப்பரவு பணியில் ஈடுபட முடியவில்லை. மீண்டும் முறுகல் ஏற்பட்டது. அங்கு பதற்றமான நிலைமையேற்றபட்டதையடுத்து, மேலதிக பொலிசார் குவிக்கப்பட்டதுடன், திருகோணமலையிலிருந்து கலகம் அடக்கும் பொலிசாரும் வரவழைக்கப்பட்டனர்.

மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட பொலிஸ் மா அதிபர், குச்சவெளி பிரதேச செயலாளர், பொலிஸ் உயர்அதிகாரிகள் அங்கு சென்று அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர், இரண்டு தரப்பையும் அங்கிருந்து வெளியேற்றி, அந்த பகுதிக்குள் யாரையும் உள்நுழைய அனுமதிப்பதில்லையென்றும், அந்த பகுதியின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுததுமாறு பொலிசாரிடம் மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.

இது விடயமாக ஜனாதிபதியின் தொழிநுட்ப பகுதிக்கு அழைக்கப்பட்டு ஆராயப்படும் எனவும் இவ்விடயத்தில் நியாயமான தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here