காவலாளிக்கு நட்சத்திர தர அறை: கரைச்சி பிரதேசசபையின் எமகாதக கணக்கு!

கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை செயலாளர் க.கம்ஸநாதன் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வரிசையாக சுமத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மாகாண கணக்காய்வுத் திணைக்களத்திற்கு எழுத்து மூலமான முறைப்பாடும் வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி மருதநகர் குளத்திற்கு முன்பாக பொழுதுபோக்கு நோக்கத்திற்காக இயற்கை பூங்காவொன்றை கரைச்சி பிரதேசசபை அமைத்துள்ளது. மாகாண நிதி ஒதுக்கீட்டில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ள நிலம் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உரியது. அந்த இடத்தில் பூங்கா அமைக்க அனுமதி கோரி, கரைச்சி பிரதேசசபை செயலாளரால் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார். குளத்தின் தேவை, பாதுகாப்பு கருதி அதில் பூங்கா அமைக்க முடியாதென நீர்ப்பாசன திணைக்களம் மறுத்து விட்டது.

நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான நிலத்தில், அவர்களின் அனுமதியின்றி, நகர அபிவிருத்தி அதிகாரசபை, சுற்றுச்சூழல் அதிகாரசபை என்பவற்றின் அனுமதியின்றி அங்கு இயற்கை பூங்கா அமைக்கும் முடிவை கரைச்சி பிரதேசசபை செயலாளர் க.கம்ஸநாதன் மேற்கொண்டார். தற்போது அங்கு இயற்கை பூங்கா அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பூங்கா அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களம் கடிதம் அனுப்பியிருந்தது.

தற்போது அங்கு முறைப்பாடியான பராமரிப்பு ஏற்பாடுகள் இல்லாததால் பற்றைக்காடாகி சமூக விரோத செயற்பாடுகள் நடக்கும் இடமாக மாற்றமடைந்துள்ளது.

இந்த இயற்கைபூங்கா அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது, சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பூங்காவின் மூலம் அதன் செலவான 34 இலட்சம் ரூபா பொதுமக்களின் பணம் வீண்விரயம் செய்யப்பட்டுள்ளது, இது தொடர்பில் உரிய கணக்காய்வு விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அந்த இளைஞன் கோரியுள்ளார்.

இதேவேளை, கரைச்சி பிரதேசசபை செயலாளர் க.கம்ஸநாதன் தொடர்பான இன்னொரு விவகாரம், கரைச்சி பிரதேசசபைக்குள் பூதாகரமாகியுள்ளது.

கரைச்சி பிரதேசசபையின் நுழைவாயிலுடன் காவலாளி அறையொன்றும், நிலத்திற்கு கல்லு பதிக்கும் வேலையும் அண்மையில் நடைபெற்றது. இந்த வேலைத்திட்டத்தில் முறைகேடு இடம்பெற்றது என குறிப்பிட்டு, பிரதேசசபை நிதிக்குழு திட்டத்திற்கான பணத்தை வழங்க ஒப்புதல் வழங்க மறுத்துள்ளது.

காவலாளி அறைக்கான செலவு 13 இலட்சமும், கல்லு பதிக்கும் செலவு 20 இலட்சமுமாக மொத்தமாக 33 இலட்சம் திட்ட செலவாக காண்பிக்கப்பட்டுள்ளது. எனினும், சிறிய காவலாளி அறை கட்டுமான செலவு 13 இலட்சம் என்பதை நம்பவே சிரமமானது என நிதிக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. வீட்டுத்திட்டங்களில் வீடொன்றிற்காக ஒதுக்கப்படும் பணம் இது, காவலாளி அறை வேலையை முறைப்படி கணக்காய்விற்குட்படுத்த வேண்டியது அவசியம், மிகச்சாதாரணமான அந்த அறைக்கான செலவு 13 இலட்சமாக இருக்கவே முடியாதென நிதிக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நிதிக்குழுவின் அனுமதியை பெற முடியாமல் உள்ளதால் ஒப்பந்தக்காரரிற்கு பணம் இதுவரை வழங்கப்படவில்லை.

கல்லு பதிப்பிலும் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக நிதிக்குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சந்தை விலை 37 ரூபாவான ஒவ்வொரு கல்லின் பெறுமதியும் 60 ரூபாவாக அந்த திட்டத்தில் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்த திட்டத்திற்கான ஒப்பந்தக்காரர் கேள்வி கோரல் மூலம் தெரிவு செய்யப்படவில்லை. தனக்கு வேண்டிய ஒப்பந்தக்காரர் ஒருவரிற்கே அந்த திட்டத்தை கரைச்சி பிரதேசசபை செயலாளர் வழங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டையும் நிதிக்குழு உறுப்பினர்கள் சுமத்தியுள்ளனர்.

கடந்த வருடம் மாவீரர் தின சமயத்தில் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் புனரமைப்பு பணியில் ஈடுபட்ட முன்னாள் போராளிகளை தடுத்திய கரைச்சி பிரதேசசபை செயலாளர்,  அது தொடர்பில் பொலிசாரிடமும் முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here