குருப் பெயர்ச்சி பலன்கள் 2018: மேஷ ராசிக்காரர்களுக்கு!


2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் சோ.சந்திரசேகரன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.

நவக்கிரகங்கள் எதுவுமே நிலையாக ஒரே இடத்தில் இருப்பதில்லை. தன்பாதையில் சூரியனை வலம் வந்து கொண்டே இருக்கின்றன. சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கிரகமான குருவானவர் சூரியனை ஒரு தடவை சுற்றிவர சுமார் 12 ஆண்டுகளுக்கும் குறைவாகவே எடுத்துக் கொள்கிறார். குருவும் பூமியைப்போல் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறார். இது தன்னைத்தானே சுற்றிக்கொள்ள சுமார் 10 மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகிறது. பூமியைப்போல் குருவிற்கும் துணைக்கோள்கள் உண்டு.

பூமிக்கு சந்திரனைப்போல் குருவிற்கு 11 துணைக்கோள்கள் உண்டு. குருவானவர் ஓர் நல்ஆசிரியர். எல்லோருக்கும் நல்வழி காட்டுபவரே அவர்தான். குருவானவர் தேவ குரு, சுக்கிரன் அசுரகுருவாகும். பொதுவாக இருவருமே எதிரிகள் என்று கூறுவார்கள். ஆனால் இந்தக் கூற்றில் உண்மை இல்லை. ஒருவர் ஜாதகத்தில் குருவும், சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் நல்லவைகள்தான் நடக்கின்றனவே தவிர கெடுதல்கள் எதுவும் நடப்பதில்லை. ஆகவே அவர்களின் சேர்க்கை எதிர்மறையான பலனைக் கொடுக்குமென்று கூறிவிட முடியாது. குருவினுடைய வீட்டிலேதான் அதாவது மீனத்திலேதான் சுக்கிரன் உச்சமடைகிறார். சரி! இனி நாம் குருப் பெயர்ச்சிப் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.

குருவானவர் திருக்கணிதரீதியாக 11-10-2018 அன்று இரவு சுமார் 7.20 மணிக்கு துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும், வாக்கியரீதியாக 04-10-2018 அன்று உதயாதி நாழிகை 40.00க்கும் விருச்சிக ராசிக்குப் பெயர்கிறார். இனி ஒவ்வொரு ராசிக்கும் குருப் பெயர்ச்சிப் பலன்களைப் பார்ப்போம். கீழே கொடுத்துள்ள பலன்களில் குரு விருச்சிகத்தில் தங்கி இருக்கும் காலமான ஓராண்டுக்கான பனலனைக் கொடுத்துள்ளோம். ஆண்டு என்பது குரு தங்கி இருக்கும் ஓராண்டைக் குறிக்கும்.

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை முதல் பாதம்)

மேஷ ராசிக்காரர்களுக்கு குருவானவர் 7-ம் இடமான துலாத்திலிருந்து விருச்சிகம் வருகிறார். அதாவது ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கின்றார். உடனே 8-ம் இடம் மறைவு ஸ்தானம். ஆகவே இந்த ஆண்டு முழுவதும் குரு பலமற்று இருக்கிறார். நல்ல பலன்களைச் செய்ய இயலாதவராக இருக்கிறார் என்று எண்ண வேண்டாம்.

8-ம் இடம் என்பது களத்திர ஸ்தானமான 7-ம் இடத்திற்கு 2-ம் இடம், அதாவது களத்திரத்தின் தனஸ்தானம். ஆகவே இந்த ராசிக்காரரின் கணவர் அல்லது மனைவிக்குப் பொருளாதார வசதி பெருகும். அவர்கள் பதவி உயர்வுக்காகக் காத்திருந்தால் அந்தப் பதவி உயர்வு கிட்டும். அதன் மூலம் அவர்கள் பொருளாதார வசதி பெறுவர். இந்த ராசிக்காரர்களின் 12-ம் இடமான விரயஸ்தானத்திற்கும் குருவின் பார்வை கிடைக்கிறது. ஆக உங்கள் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். இரண்டு மற்றும் நான்காம் வீட்டிற்கும் குருவின் பார்வை கிட்டுவதால் உங்கள் பண வரவு நன்றாக இருக்கும்.

4-ம் இடமான கடகத்திற்கு ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களில் செவ்வாயின் பார்வைவேறு கிடைக்கிறது. ஆகவே இந்த ராசிக்காரர்கள், வீடு, வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள் வாங்க விழைந்தால் இந்த மாதங்களில் முயற்சித்தால் அதில் வெற்றி பெறுவார்கள். குருவானவர் ஐப்பசி 9-ம் தேதி முடிய விசாக 4-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்கின்றார். அப்போது சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் செய்யும்படியாக இருக்கும். ஐப்பசி 10 முதல் மார்கழி 11 முடிய குருவானவர் அனுஷம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கின்றார். அப்போது சிலருக்குத் தொழில் சம்மந்தமாக வெளியூர்ப்பயணம் மேற்கொள்ள நேரிடும்.

உத்தியோகத்தில் முன்னேற்றமும் காணப்படும். இந்த ஓராண்டு முழுவதும் இளைய சகோதரத்துடனான உறவு சுமூகமாக இருக்காது. நீங்கள் எதிர்பார்க்கும் வண்ணம் அவர்கள் இருக்க மாட்டார்கள். ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களில் இந்த ராசிக்காரர்கள் சிறிது எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். உடலில் காயங்கள் ஏற்படக் கூடிய கிரக நிலைகள் காணப்படுவதால் சிறிது முன் எச்சரிக்கையுடனே இருங்கள்.

வியாபாரத்திலிருப்போருக்கு: பொதுவாக இந்த ஆண்டு நல்ல விதமாகவே காணப்படுகிறது. சித்திரை, ஆவணி மாதங்களில் வியாபாரத்தில் மந்த நிலையும், சுணக்கமும் காணப்படும். பங்குனி, ஆனி, புரட்டாசி மாதங்களில் நல்ல வியாபாரத்தை எதிர்பார்க்கலாம்.

உத்தியோகத்திலிருப்போருக்கு: பொதுவாகவே இந்த ஆண்டு முழுவதும் உத்தியோகத்திலிருப்போருக்கு பிரச்னைகள் உள்ள காலமாகவே காணப்படுகிறது. 6-ம் இடமான உத்தியோகஸ்தானத்திற்கு 9-ம் வீட்டிலிருந்து சனிபகவான் பார்வை இருப்பதால் உத்தியோகத்தில் மதிப்பின்மை, பதவி உயர்வில் காலதாமதம் ஆகியவை காணப்படுகின்றன.

கலைஞர்களுக்கு: கலைக்கு அதிபதியான சுக்கிரன் நிலையை வைத்துப் பார்க்கும்போது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, சித்திரை, ஆவணி ஆகிய மாதங்கள் மிக அனுகூலமாக இருக்கின்றன.

பரிகாரம்: ராசிக்கு அதிபதி செவ்வாயாக இருப்பதால் அனுதினமும், குறிப்பாக செவ்வாய்க் கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் சொல்லி வரவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here