புலிகளை தாக்குவதற்கு ஆயுதம் கொடுத்த சிவாஜிலிங்கம்!: சிவராம் கொலை இரகசியம்- மினி தொடர் 03

மாலைதீவு தாக்குதல் முறியடிக்கப்பட்ட பின்னர்

விடுதலைப்புலிகளின் தாக்குதலையடுத்து காடுகளில் ஒளிந்திருந்த புளொட் போராளிகள் மீது இந்திய படைகளும் தாக்குதலை ஆரம்பித்தனர் என்பதையும், இரண்டு பக்கமும் தாக்குதல் நடக்க, தப்பிக்க மார்க்கமில்லாமல் புளொட் போராளிகள் திண்டாடினார்கள் என்பதையும் கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

இதற்குள் இன்னொரு சம்பவமும் நடந்தது. புளொட் அமைப்பினர் மீது இந்திய அமைதிகாக்கும் படையினர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது, றோ இன்னொரு திட்டம் போட்டது. புலிகளிற்கு எதிராக புளொட்டை கொம்புசீவிவிட இந்த சந்தர்ப்பத்தை பாவிக்க றோ விரும்பியது. புளொட்டிற்கு ஆயுதம் கொடுத்து புலிகளிற்கு எதிராக களமிறக்கினால், வடக்கு கிழக்கில் புலிகளின் முக்கியத்துவத்தை இழக்கவைக்கலாமென கணக்கு போட்டார்கள்.

ஆனால், புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் அதற்கு தயாராக இருக்கவில்லை. தமிழ் ஆயுதப்போராட்ட வரலாற்றில் பல தலைவர்களை பற்றிய உண்மையான வரலாறு வெளிவராதது சோகமான நிகழ்வு. பிரபாகரனை போலவே, இந்திய விஸ்தரிப்புவாதத்திற்கு எதிரான மனநிலையையுடையவர்தான் உமா மகேஸ்வரன். ஆனால் அதுபற்றியெல்லாம் நமது சூழலில் பேசப்படாத நிலைமை உருவாகிவிட்டது. எனினும், உமாமகேஸ்வரனின் இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிரான மனநிலை, அதனாலேயே அவர் கொல்லப்பட்டதையெல்லாம் முறையாக பதிவுசெய்வதே முழுமையான வரலாறாக இருக்கும்.

இந்தியாவிடமிருந்து ஆயுதம் வாங்குவதை உமா மகேஸ்வரன் விரும்பவில்லை. இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை, தற்காலிக ஆபத்திலிருந்து தப்பிக்க, விட்டுக்கொடுக்க அவர் விரும்பவில்லை. அதனால் ஆயுதம் வாங்குவதற்கு அனுமதிக்கவில்லை. இந்த சமயத்தில் புளொட் போராளிகளிற்குள் உமாமகேஸ்வரனிற்கு எதிராக கடுமையான பிரச்சாரம் நடந்தது, அதை முன்னின்று செயற்படுத்தியவர் சிவராம்தான் என்பதை கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தோம்.

காட்டுக்குள் தங்கியிருந்த புளொட் அமைப்பிடம் ஆயுதப்பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. இந்தியாவிடம் ஆயுதம் வாங்குவதில்லையென்ற உமா மகேஸ்வரனின் முடிவால் நெருக்கடியிலிருந்த புளொட்டிற்கு தற்காலிக ஆறுதல் கொடுத்தது சிவாஜிலிங்கமே. இன்றைய வடமாகாணசபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் அன்று ரெலோ முக்கியஸ்தர்.

விடுதலைப்புலிகளால் ரெலோவும் தாக்கப்பட்டிருந்தது. ரெலோ போராளிகள் தமிழகத்தில் ஒன்று திரட்டப்பட்டு, மீண்டும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு மன்னார் வழியாக இலங்கைக்கு வந்திருந்தனர். றோ அமைப்பு தாராளமாக ரெலோவிற்கு ஆயுதம் வழங்கியிருந்தது. புலிகளிற்கு எதிராக ரெலோவை நன்றாக பலப்படுத்தியிருந்தார்கள். இந்தியா வழங்கிய ஆயுதங்களில் கொஞ்சத்தை புளொட்டிற்கு சிவாஜிலிங்கம் ஊடாகவே வந்தது.

அந்த சமயத்தில் உமாமகேஸ்வரன் கொஞ்ச போராளிகளுடன் கொழும்பில் தங்கியிருந்தார். வவுனியா, மன்னார் பகுதிகளின் காட்டு பகுதிகளில் புளொட் போராளிகள் மறைந்திருந்தனர். சிவராம் தனது பேச்சாற்றலாம் குறிப்பிட்ட சில காலத்திற்குள்ளேயே புளொட் அமைப்பின் முக்கியஸ்தர் ஆனவர். நல்ல பேச்சாற்றலுடையவர். உடா மகேஸ்வரனிற்கு எதிரான பிரசாரத்தை அவர் தலைமைதாங்கினார்.

“இப்பொழுது நம்மிடம் ஆயுதங்கள் இல்லை. ரெலோ தந்த கொஞ்ச ஆயுதங்களும் விரைவில் தீர்ந்தால், குருவி சுடுவதை போல இந்திய இராணுவமும், புலிகளும் சுட்டுவிடுவார்கள். இந்திய புலனாய்வுத்துறை தரும் ஆயுதங்களை வாங்குவதை விட நமக்கு வேறு வழியில்லை“ என்ற சாரப்பட பிரசாரம் செய்தார்.

 

மாலைதீவு தாக்குதல் முறியடிக்கப்பட்ட பின்னர்

அப்படியானால் வாங்குவதுதானே என போராளிகள் கேட்க, தலைவர் உமா மகேஸ்வரன் அதை அனுமதிக்கிறார் இல்லையென முடிப்பார்.

அப்படியானால் என்ன செய்வதென போராளிகள் திருப்பி கேட்க, உமா மகேஸ்வரன் புளொட் தலைவராக இல்லாவிட்டால்தான் ஆயுதம் வாங்கலாமென்பார்.

அதாவது, உமா மகேஸ்வரன் “இல்லாவிட்டால்தான்“ ஆயுதம் வாங்கலாம் என்பதே அதன் அர்த்தம்!

நன்றாக கவனியுங்கள், இதில் எங்கும் அவர் உமா மகேஸ்வரனை கொல்ல வேண்டுமென சிவராம் கூறவில்லை. ஆனால், கொல்ல வேண்டுமென்பதை வேறு அர்த்தத்தில் கூறியிருந்தார். இதுதான் சிவராமின் சாமர்த்தியம்!

சிவராம் உசுப்பேற்றிய சமயத்தில்,இந்தியாவில் இருந்த சில புளொட் உறுப்பினர்களுடன் றோ உளவுப்பிரிவின் அதிகாரிகள் இரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர். உமா மகேஸ்வரனை கொன்றால், பெருந்தொகை பணத்தை தரலாமென்று கூறினார்கள்.

உமா மகேஸ்வரனை கொல்ல வேண்டுமென இந்திய உளவுப்பிரிவு முடிவெடுத்ததற்கு உடனடி காரணமிருந்தது. அவர் இந்திய விஸ்தரிப்புவாதத்திற்கு எதிரானவர். இந்திய எதிர்ப்பு வாதத்துடன் இலங்கையிலும், இந்தியாவிலும் பலர் இருந்தனர். நமது இடதுசாரிகளை பாருங்கள், அவர்கள் ஒன்றில் சீனா அல்லது ரஷ்யாவின் ஆட்கள். ஆனால், அவர்களை இந்தியா கொல்லவில்லை. அப்படியானால் ஏன் உடா மகேஸ்வரன் கொல்லப்பட்டார்?

உமா மகேஸ்வரன் இந்திய விஸ்தரிப்பு வாதத்தை கூட்டம் போட்டு பேசிக் கொண்டிருக்கவில்லை. அதன் செயல்பூர்வ தன்மைக்கு சென்றிருந்தார். அதுதான் இந்தியாவிற்கு பிரச்சனையை கொடுத்தது.

உமா மகேஸ்வரனை உயிருடன் விடக்கூடாது என இந்திய புலனாய்வு அமைப்பான றோ முடிவெடுக்க காரணமாக இருந்த சம்பவமொன்றுள்ளது.

அது மாலைதீவு தாக்குதல்.

புளொட் அமைப்பினர் 1988 செப்ரெம்பரில் மாலைதீவை கைப்பற்ற ஒரு இராணுவ நடவடிக்கை செய்தார்கள். இந்த தாக்குதலை இந்திய இராணுவத்தினர் முறியடித்திருந்தனர். இந்தியாவின் திட்டப்படிதான் புளொட் அமைப்பு தாக்குதலை நடத்தியது என இப்பொழுது நம்புபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. இந்தியாவிற்கும் இந்த தாக்குதலிற்கும் துளியளவும் சம்பந்தமில்லையென்பதே உண்மை!

அப்படியானால் மாலைதீவு தாக்குதலின் உண்மையான பின்னணி என்ன?

அதை தமிழ்பக்கம் வாசகர்களிற்காக விரைவில் ஒரு மினி தொடராகவே தர திட்டமிட்டுள்ளோம்.

மாலைதீவு தாக்குதலில் கைதான புளொட் போராளிகள் சிறையிலிருந்த சமயம். அவர்களை விடுவிக்க புளொட் முயற்சிகளை செய்ய ஆரம்பித்தது. அப்போதைய இலங்கை தூதர் டிக்சிற்றை புளொட் முக்கியஸ்தர்கள் இருவர் சந்தித்து, சிறையிலிருப்பவர்களை விடுவிக்க உதவுமாறு கேட்க சென்றது. அந்த குழுவில் இருந்தவர்களில் ஒருவர் சிவராம்.

அந்த குழுவை வாசலில் நிற்பாட்டியே திட்டித்தீர்த்த டிக்சிற், அடித்து விரட்டாத குறையாக அங்கிருந்து கலைத்து விட்டார்.

மாலைதீவு தாக்குதல் நடந்ததுமே, உமா மகேஸ்வரன் அகற்றப்பட வேண்டியவர்தான் என்ற முடிவிற்கு இந்தியா வந்துவிட்டது. தமது கட்டுப்பாட்டை மீறி எந்த இயக்கம் செயற்பட்டாலும் அவர்களை இந்தியா அழிக்கும். உமா மகேஸ்வரனிற்கு நடந்ததும், புலிகளிற்கு நடந்ததும் ஒரேவிதமான இந்திய நடவடிக்கைதான்!

இந்த இடத்தில் வாசகர்களிற்கு ஒரு சந்தேகம் வரலாம். புளொட் அமைப்பை இந்திய அமைதிப்படை தாக்குகிறது. உமா மகேஸ்வரனை கொல்ல வேண்டுமென றோ உளவுப்பிரிவு விரும்புகிறது. ஆனால் அதே றோ உளவுப்பிரிவு, புளொட்டிற்கு ஆயுதம் கொடுக்க விரும்புகிறதே… இதென்ன தலைசுற்றும் கணக்காக இருக்கிறதே என.

உளவுப்பிரிவுகளின் நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்கும். இந்த சூட்சுமமான நடவடிக்கைகளிற்குள்தான் சுழித்து, தமிழர்கள் கரையேற வேண்டும்.

உமா மகேஸ்வரன் இல்லாமல் போனால்தான்- நன்றாக கவனிக்கவும், “இல்லாமல் போனால்“ தான்- புளொட் தப்பிபிழைக்குமென சிவராம் செய்த பிரசாரத்திற்கு நல்ல பலன் கிடைத்தது.

புளொட் அமைப்பின் போராளிகள் சிலர் உமா மகேஸ்வரனை கொலை செய்வதென முடிவெடுத்தனர். இந்தியாவில் றோ அமைப்பின் லிங்கில் இருந்தவர்களும் இவர்களை உற்சாகப்படுத்தியிருக்கலாம். ஆனால் அதற்கு இப்பொழுதுவரை உறுதியான ஆதாரமில்லை. சம்பவங்களை கூட்டிக்கழித்த்து பார்க்க, அதற்கு நிச்சயமான வாய்ப்புள்ளது புரியுமே தவிர, ஆதாரமான தகவல்கள் இல்லை. இந்த தொடரில் நாம் குறிப்பிடும் மற்ற விசயங்கள் எல்லாமே ஆதாரபூர்வமானவை. வரலாற்றை யாராலும் திரிக்க முடியாது. அதனால், நம்மிடம் ஆதாரமில்லாத விசயங்களை நேர்மையாக குறிப்பிட வேண்டும்.

உமா மகேஸ்வரனை கொலை செய்ய திட்டமிட்ட புளொட் உறுப்பினர்கள், கொழும்பில் வைத்து திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றினார்கள். உமா மகேஸ்வரன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, கூட சென்ற மெய்பாதுகாவலர்களால் பின்னாலிருந்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் நேரடியாக தொடர்புபட்டவர்கள் ராபின், ஆச்சி ராஜன் (சுழிபுரம்), மதன் (அச்சவேலி- தற்போது கனடா), கே.எல்.ராஜன் (லண்டன்), ஜெயா (தெல்லிப்பழை- தற்போது கனடா) ஆகியோரே. இதில் ராபினும், ஆச்சி ராஜனும் இப்பொழுது உயிருடன் இல்லை. உமா மகேஸ்வரனை துப்பாக்கியால் சுட்டது ராபின்.  அவர் சுவிசிற்கு தப்பி சென்றிருந்தார். தமது தலைவரின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களிற்கு மரணதண்டனை விதித்தது புளொட். சுவிசிற்கு தப்பி சென்ற ராபினை துரத்தி சென்று, சுவிசில் வைத்து கொலை செய்தனர். ராபினின் வீட்டில் வைத்து நடந்த கொலை அது. கொலை சம்பவத்தை ராபினின் மனைவியும் பார்த்து விட்டார். அவரையும் கொலை செய்தனர்.

ஆச்சி ராஜன் மாரப்பால் உயிரிழந்து விட்டார்.

இதில் சுவாரஸ்யமான சம்பவமொன்றும் உள்ளது. உமா மகேஸ்வரன் உயிரிழந்த பின்னர் புளொட்டுடன் தொடர்பில் இருந்த ஐந்தாறு சிறுசிறு குழுக்கள் அந்த தாக்குதலிற்கு உரிமைகோரி, இந்தியாவின் றோ உளவுப்பிரிவிடம் பணம் பெற்றார்களாம்!

எப்படியோ ஆள் முடிந்தால் சரியென்ற அளவில் றோ பணத்தை எல்லோருக்கும் கொடுத்திருக்கலாம்.

(தொடரும்)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here