சுரேஷின் ஓயாத அலைகள் இன்றும் தொடருமா?; சுமந்திரனின் இறுதிநேர முயற்சிகளின் பலன் எப்படியிருக்கும்?

வவுனியா நகரசைபயில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்க்காத திடீர் அதிரடி நகர்வின் மூலம் நெற்றியடி கொடுத்த ஈ.பி.ஆர்எல்.எவ் இன் அதிரடி நடவடிக்கைகள் இன்று தொடருமா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.

இன்று வவுனியா வடக்கு, வவுனியா- தமிழ் பிரதேசசபைகளின் தவிசாளர் தேர்வு இடம்பெறவுள்ளது.

வவுனியா நகரசபையில் ஈ.பி.ஆர்.எல்.எவ், ஐ.தே.க, சு.க கூட்டணி ஆட்சியை பிடித்தது. செட்டிக்குளத்தில் சு.க ஆட்சியை பிடிக்க வசதியாக,ஈ.பி.ஆர்.எல்.எவ் நடுநிலைமை வகித்தது.

இன்று வவுனியா வடக்கில் ஐ.தே.க ஆட்சியமைக்கும் வாய்ப்புக்கள் உண்டென தெரிகிறது. ஐ.தே.கவின் பட்டியலில் களமிறங்கிய ரிசாட் பதியுதீன் தரப்பும், ஈ.பி.ஆர்.எல்.எவ் உம் இரகசி உடன்பாடொன்றிற்கு வந்து கூட்டணி அமைத்து செயற்படுகின்றன போலத்தான் தெரிகிறது. மன்னார் மாந்தையில் ரிசாட் தரப்பு ஆட்சியமைக்க ஈ.பி.ஆர்.எல்.எவ் உதவியது. வவுனியா நகரசபையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆட்சியமைக்க ரிசாட் அணி உதவியது.

வவுனியா வடக்கை ரிசாட் அணி குறிவைத்துள்ளதாக தெரிகிறது. இங்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் எப்படியான நிலைப்பாட்டை எடுக்கிறது என்பதை பொறுத்து, அவர்களிற்கிடையிலான அரசியல் உடன்பாட்டை கணக்கிடகூடியதாக இருக்கும்.

இதேவேளை, இன்று தவிசாளர் தெரிவு நடக்கவுள்ள இரண்டு சபைகளையும் கைப்பற்ற சுமந்திரன் நேற்று இரவு வரை பல சுற்று பேச்சுக்களில், முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் தேசிய கட்சிகளுடன் கூட்டுவைத்து ஆட்சியமைத்த நிலையில், வவுனியாவில் அப்படியான முயற்சிகள் எதுவும் செய்யவில்லையென தமிழரசுக்கட்சி வவுனியா அணிக்குள் அதிருப்தி எழுந்ததையடுத்தே, சுமந்திரன் இறுதிநேர முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

சுமந்திரனின் முயற்சிகள் வெற்றியளிக்குமா, அல்லது ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் ஓயாத அலைகள் தொடருமான என்பது இன்று காலை தெரிந்து விடும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here