ஈ.பி.டி.பிக்கு நிர்வாக அறிவு சூனியம்; நான் கோயில் காணியில்தான் குடியிருக்கிறேன்: சீ.வீ.கே!

தன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் ஈ.பி.டி.பியினருக்கு நிர்வாக அறிவு சூனியமானது என பதிலடி கொடுத்துள்ளார் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.

யாழ் மாநகரசபையின் முதலாவது அமர்வில், ஈ.பி.டி.பியின் கடந்த நிர்வாகத்தின் மீது சரமாரியான ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. இதன்போது, ஈ.பி.டி.பியின் உறுப்பினரும், மேயர் வேட்பாளராக களமிறங்கி மண்கவ்வியமருமான ரெமீடியஸ்- “முன்னாள் ஆணையாளர் சீ.வீ.கே.சிவஞானமும் ஊழல் செய்தார்“ என இரண்டு விடயங்களை சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, அந்த விடயங்களை தெளிவுபடுத்தி, மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆனோல்டிற்கு அவைத்தலைவர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தை கீழே இணைத்துள்ளோம்.

 

16.04.2018

எமது இல: JMC/05

 

கௌரவ இமானுவல் ஆனோல்ட் அவர்கள்

முதல்வர்

மாநகரசபை

யாழ்ப்பாணம்

ஊழல் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 11.04.2018 ஆம் திகதிய கூட்டத்தில் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் திரு மு. றெமிடியஸ் எமக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் மூலம் அறியவந்துள்ளது.

முதலாவது குற்றச்சாட்டு ;

“யாழ். நகர் மத்தியில் மாநகர சபை புதிய கட்டடத் தொகுதி அமைப்பதற்கு முன் 6 கடைகள் கட்டப்பட்டது அந்தக் கடைகள் கட்டப்பட்ட காலம் தற்போதய மாகாண அவைத்தலைவரும் முன்னாள் மாநகரசபை ஆணையாளர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் கட்டப்பட்டது”

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் புதியவை அல்ல  இவ்விடயம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எமக்கெழுதிய 25.04.2011 ஆம் திகதிய கடிதத்திற்கு எமது 30.04.2011 திகதிய நான்கு பக்க கடிதம் மூலம் தெளிவாக பதிலனுப்பியிருந்தேன். அதன் நிழற்பிரதி இத்தடன் இணைக்கப்படுகின்றது.

அந்தக் கடைகள் கட்டப்பட்ட காலம் நான் மாநகர சபை ஆணையாளராக இருந்த காலத்தில் எமது தலைமையில் கட்டப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் எந்தக் காலப்பகுதி எனத் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

இது ஒரு திட்டமிடப்பட்ட பொய்க் குற்றச்சாட்டாகும், எனது முழு ஆணையாளர் பதவிக் காலத்திலும் இந்தக் கட்டடங்கள் அமைக்கப்பட்வில்லை. என்பதை மிகவும் அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதுவே போதும் இவர்களது காழ்ப்புணர்ச்சியை இணங்காண்பதற்கு. அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று ஒரு பொறுப்பான சபையில் பொறுப்பற்று முன்வைக்கப்பட்ட நுனிப்புல் மேயும் குற்றச்சாட்டே இது.

இவர்கள் குறிப்பிடும் 6 கடைகளும் மாநகர சபையால் கட்டப்பட்டவை அல்ல. 1970 களின் முற்பகுதியில் அப்போது மாநகர முதல்வராகவிருந்த காலஞ் சென்ற அல்பிரட் துரையப்பாவினால் தனித்தனியாக 6 பேருக்கு நிலக்குத்தகையாக வழங்கப்பட்ட காணியில் அவர்கள் தனித்தனியாக தமது முதலீட்டில் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்ட கடைகளே ஆகும். இவற்றுக்கான ஒப்பந்தங்கள் கூட எழுதப்படவில்லை.

இந்த நடவடிக்கை மாநகரசபைகள் கட்டளைச் சட்டத்தின் 40(1) (F) இக்க முரனானதாகும்.

இந்த பிரிவு பின்வருமாறு உள்ளது.

 40 (1)(F…… “to lease either in block or in parcels –

(I)  any land or building vested in the Council by virtue section 35 or section 37 if the prior sanction of the President has been obtained by the Council.”

ஜனாதிபதியின் முன் அங்கீகாரம் பெறாமலேயே இந்தக் குத்தகை வழங்கப்பட்டமையால் அது சட்டத்திற்கு முரணானது என்பதும் அவர்களால் அமைக்கப்பட்ட கட்டடம் அங்கீகாரமற்ற கட்டடமாகும் என்பதும் தெளிவு.

இவ்வாறு கடைகளைக் கட்டியவர்களிடமிருந்து அக்கடைகள் பல கைமாறியதுடன் அவர்கள் ஒவ்வொரு கடைக்கும் மாதாந்தம் 25,000 வரை வாடகை அறவிட்டு வந்த அதே நேரம் நிலக்குத்தகையாக ரூபா 200க்கும் 300க்குமிடையில் சபைக்கு செலுத்தி வந்துள்ளனர். இதனால் சபைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் முறைகேடாக  தனி நபர்களுக்கு கிடைத்தன

இந்த நிலையில் நிர்வாகத்துக்கு இருந்த தெரிவு (option) இரண்டு. அதில் ஒன்று மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 42 (A) பிரிவின் கீழ் அங்கீகாரமற்ற கட்டடமாகையால் அவற்றை இடித்து அகற்றல் அல்லது 1980 ஆம் ஆண்டின் மத்திய உள்ளூராட்சி ஆணையாளரின் 46/80 சுற்றறிக்கைளின் படி 1980 களில் கைமாற்றல்களுக்குள்ளான நவீன சந்தைக் கடைகளை

 முறைப்படுத்தல். (Regularization) செய்தது போன்று நடவடிக்கை எடுத்தல்.

இந்த நிலையில் இவற்றை முறைப்படுத்தும் முடிவெடுக்கப்பட்டு இந்தக் கடைகளை அப்போது நடாத்தி வந்தவர்கள் யாவரும் ஒன்றாக அழைக்கப்பட்டு நிலைமை தெளிவு படத் தெரிவிக்கப்பட்டது. கலந்துரையாடலின் போது கடைகளை சபையின் உடமையாக்குவது என்றும் அதன் பின் நில வாடகையை மாற்றி கடை வாடகையாக்குவதுதென்றும்  அவற்றிற்கு விலைமதிப்பீட்டுத் திணைக்களம் நிர்ணயிக்கும் வாடகையை அவர்களிடமிருந்து அறவிடுவது என்றும் இதன் அடிப்படையில் 46/80 சுற்றறிக்கைக்கு ஏற்ப அவர்கள் ஒவ்வொருவரும் ஒரேயடியான Premium செலுத்த வேண்டும் எனவும்  தீர்மானிக்கப்பட்டு முறையாக்கம் செய்யப்பட்டது.

இதன் மூலம் ஆறு கடைக்காரர்களிடமிருந்து ரூபா நாற்பத்தொன்பது லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வரை (4950000) சபை வருமானமாக அறவிடப்பட்டது.

கடைகளில் இடங்கொண்டிருப்பவர்களுக்கான முறையாக்கல் என்பதால் கேள்வி நடைமுறை எழாது. எனினும் நவீன சந்தைக் கடை ஒன்று (இலக்கம் 16 என நினைக்கிறேன்) அது வெற்றிடமாக இருந்ததால் பகிரங்க கேள்வி கோரலின் மூலம் ரூபா பதினைந்து லட்சம் (1500000) வரை Premium அறவிடப்பட்டு  குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் மொத்தம் அறுபத்தைந்து லட்சம் ரூபா (6500000) வரை சபை வருமானமாக அறவிடப்பட்டது. அப்போதைய சபையின் நிதி நெருக்கடியை சமாளிக்க இது பெரும் உதவியாக இருந்தது என்பது இன்னுமொரு விடயம்.

இந்த முழு நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட சகல உத்தியோகத்தர்களின் பங்கேற்புடனும் ஆலோசனையுடனுமே இடம்பெற்றன. என்பதுடன் அவர்களாலேயே கையாளப்பட்டன. இது சம்பந்தமான முழுமையான கோவைகள் நானாவித இறைவரிப் பகுதியில் பேணப்பட்டன. அலுவலர்கள் யாவரும் நேர்மையாகவும் ஊழல் இன்றியும் செயற்பட்டனர் என்பது குறிப்பிட வேண்டியதாகும்.

இவற்றையெல்லாம் பார்வையிடக் கூடிய நிலையில் வருடக்கணக்கில் இருந்தவர்கள் அல்லது இப்போது இருப்பவர்கள், எழுந்தமானமாக பத்து வருடங்களுக்கப் பின் ஏதோ புதிய விடயம் போன்று குற்றம் சாட்டுவது அரசியல் உள்நோக்கம் கொண்டவை ஆகும். இதற்கான காரணத்தை நான் புரிந்து கொண்டு தான் உள்ளேன். அவற்றை உரிய நேரத்தில் தெரிவிப்பேன்.

இவர்களது அடுத்த குற்றச்சாட்டு 

“கோவில் காணியில் தங்களுடைய பதவிக் காலத்தில் சோலைவரியை தனது பெயரில் மாற்றியுள்ளார்.”எதுவித அடிப்படையுமற்றது இந்தக் குற்றச்சாட்டு. இவர்களது நிர்வாக அறிவு சூனியத்தை எடுத்துக்காட்டுகின்றது. ஆதனவரி பெயர்மாற்றத்திற்கென தெளிவான நடைமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றியே  அலுவலர்கள் செயற்படுகின்றார்கள். இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைக்கு முன்பாக ஆதனவரிப் பகுதியில் உள்ள பதிவேடுகளையும் தொடர்புடைய ஆவணங்களையும் பார்வையிட்டு விசாரணை செய்திருக்கவேண்டும். இது எனக்கெதிரான குற்றச்சாட்டா அல்லது மாநகர சபை நிர்வாகத்திற்கு எதிரானதா என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பகிரங்கமாக தங்களதும் பொதுமக்களினதும் தெரிதலுக்காக முழு விபரமும் சுருக்மாகத் தரப்படுகின்றது.

நான் யாழ்ப்பாண மாநகரசபையின் கணக்காளராக நியமிக்கப்பட்ட 1972 ஆம் ஆண்டு மற்றும் ஆணையாளராக நியமனம் பெற்ற 1975 ஆம் ஆண்டிலும் சரி உள்ளூராட்சி சேவையைப் பொறுத்தவரை உயரதிகாரிகள் அந்தந்த உள்ளூராட்சிப் பிரதேசத்திலேயே வசிக்க வேண்டும் என்ற கோட்பாடு இருந்தது. இதனாலேயே மாநகரசபையிலிருந்து ஒரு கிலோமீற்றருக்கு சற்றுக் கூடுதலான தூரத்தில் எனது சொந்த வீடு இருந்த போதும் மாநகர எல்லைக்குள் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தேன். சொந்தமான வீட்டின் தேவை எனக்கிருந்தது. இந்த நிலையில் மாநகர எல்லைக்குள் சொந்தக் காணி இல்லாததால் நல்லூர் சட்டநாதர் சிவன் கோவில்  தர்மகத்தாவிடம் இருந்து 01.11.1982 ஆம் திகதிய உறுதி இலக்கம் 1285, மூலமும் 03.10.1985 ஆம் திகதிய உறுதி இலக்கம் 1832, மூலம் மொத்தம் 2½ பரப்பு வெற்றுப் பள்ளக்காணியை மாதாந்தம்  ரூபா 55  நிலக்குத்தகைக்குப் பெற்றிருந்தேன். மாநகரசபை ஆதனவரிப் பகுதி பதிவேடுகளில் நல்லை நாதர் கோவில் தர்மகத்தா காணி உரிமையாளர் என்றும் குத்தகை சீ.வீ.கே.சிவஞானம் என்றே பதிவுகளும் அறிவித்தல்களும் பேணப்பட்டன.

இக்காணிகளின் இலக்கங்கள் 904/5 மற்றும் 910/2 ஆகும். 904/5இலக்க காணியில் BA/4/904/5/648/82 இலக்க கட்டிட விண்ணப்பத்தின் மூலம் அங்கீகாரம் பெற்று குடியிருத்தலுக்கான வீடொன்றைப் கட்டியிருந்தேன். இந்த நிலையில் யாழ்ப்பாணம் நீதிமன்ற வழக்கு இல நம்பிக்கைச் சொத்து /55 மூலம் நீதிமன்ற அனுமதி பெற்று 2010.08.11ஆம் திகதிய உறுதி இலக்கம் 2603 மூலம் இந்தக் காணியை நீதிமன்றம் நிர்ணயித்த தொகையைச் செலுத்தி அறுதியாகப் பெற்றுக் கொண்டேன்.

இந்த ஆவணங்கள் யாவையும் சமர்ப்பிக்கப்பட்டே ஆதனப் பெயர் மாற்றம் மாநகர ஆணையாளரது 22.07.2011ஆம் திகதிய கடித இலக்கம் ஜி/ஏரிடி/04/904/8/628/11 மூலம் பெயர் உட்புகுத்தல் மேற்கொள்ளப்பட்டது.

இவை நடைபெற்ற முழுக்காலப் பகுதியிலும் (2010/2011) நான் மாநகர சபையில் மட்டுமன்றி இந்த விடயம் தொடர்பாக வேறு எந்த அரச நிறுவனத்திலும் பதவி வகிக்கவில்லையென்பது பகிரங்கமாக யாவருக்கும் தெரிந்த உண்மை. எனவே எனது பதவிக்காலத்தில் கோவைப் பதிவை மாற்றியுள்ளேன் என்பது அப்பட்டமான பொய் என்பது தெளிவு.

நான் கோவில் காணியில் குடியிருந்தவன் எனக் கொச்சைப்படுத்தம் நோக்கில் இக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. போலத் தெரிகின்றது. அவ்வாறாயின் அதை பெருமையோடு ஒப்புக் கொள்கின்றேன்.

நான் ஆணையாளராக இருந்த காலத்தில் நடைபெறாத விடயங்களை அவ்வாறு நடைபெற்றதாக கூறுவது அப்பட்டமான பொய் என்பது தெளிவாகும் இவை தொடர்பான ஆவணங்கள் யாவும் தங்களது அலுவலகப் பகுதியிலேயே இருப்பதால்  இவற்றையெல்லாம் ஆராய்ந்து விசாரணை செய்து இது என்னை அவமானப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டதும் அரசியல் ரீதியாக அபகீர்த்தியேற்படுத்தவும் எனது சுய கௌரவத்தை பாதிக்கும் கூற்றுக்கள் என்பதால் இதற்கான முக்கியம் கொடுத்து மாநகரசபையின் அடுத்த கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்து உதவுமாறு வேண்டுகின்றேன்.

குற்றச்சாட்டுக்கள் பத்திரிகை செய்திகள் மூலம் அறியவந்ததன் காரணத்தினால் எனது தன்னிலை விளக்கத்தினை பொதுமக்களும் அறிந்து கொள்வதற்றகாக இக் கடிதத்தின் பிரதி ஊடகங்களுக்கு வழங்கப்படுகின்றன.

நன்றி

சீ.வீ.கே.சிவஞானம்

 

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here