புன்னாலைக்கட்டுவனின் ஹைஏஸ் வாகனத்தை தலைமுடியில் கட்டியிழுந்த 54 வயதானவர்!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஹைஏஸ் வாகனத்தை ஒரு கிலோ மீற்றர் தூரம் தன் தலைமுடியினால் கட்டி இழுத்து குடும்பஸ்தரொருவர் சாதனை படைத்துள்ளார்.புன்னாலைக்கட்டுவன் பறக்கும் கழுகு விளையாட்டுக் கழகத்தின் 43 ஆவது வருட நிறைவை முன்னிட்டும், தமிழ்- சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும் புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலயத்திற்கருகில் கலாசாரப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

இதன் ஒருகட்டமாக சாகச நிகழ்வு புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயத்திற்கருகில் பலாலி பிரதான வீதியில் பிற்பகல்-05 மணியளவில் ஆரம்பமாகியது.இதன் போது யாழ். தையிட்டியைச் சொந்தவிடமாகக் கொண்டவரும் தற்போது மட்டுவில் பகுதியில் வசித்து வருபவருமான 54 வயதுடைய செல்லையா திருச்செல்வம் ஹைஏஸ் வாகனத்தில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட கயிற்றைத் தனது பின்னம் தலைமுடியில் முடிச்சுப் போட்டுத் தொடர்ச்சியாக ஹைஏஸ் வாகனத்தை ஒரு கிலோ மீற்றர் தூரம் இழுத்துச் சாதனை படைத்துள்ளார்.

ஆரம்பத்தில் தலைமுடியால் ஹைஏஸ் வாகனத்தை இழுத்தவாறு நடந்து சென்றவர், பின்னர் வாகனத்தை இழுத்தவாறு வேகமாக ஓடிச் சென்றார்.

புன்னாலைக்கட்டுவன் ஐயனார் ஆலயத்திற்கருகில் மேற்படி குடும்பஸ்தர் தனது சாதனை முயற்சியை நிறைவு செய்து கொண்டார்.

தனது அடுத்த கட்ட இலக்கு என் தலைமுடியினால் ஹைஏஸ் வாகனத்தை இரண்டு கிலோ மீற்றர் தூரம் இடைவிடாது இழுத்துச் சாதனை படைப்பதேயாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here