இலங்கையின் முதுகெலும்பை உடைத்த இங்கிலாந்தின் 23 வயது வீரர்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்தின் இளம் ஓப்பிரேக் சுழற்பந்துவீச்சாளர் டெம் பெஸ் இலங்கையின் முதுகெலும்பை உடைத்தார். சொந்த நாட்டிலேயே ரி20 ஸ்கோரையும் விட குறைந்த ஸ்கோரை பெறும் இந்த அணி, உண்மையில் டெஸ்ட் ஆட தகுதியானதா என்பதை இலங்கை கிரிக்கெட் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமானது.<

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

தொடக்க வீரர்கள் லஹிரு திரிமன்ன, குசல் பெரேரா களமிறங்கினர். எப்பொழுதே சர்வதேந கிரிக்கெட்டிற்கு பொருத்தமற்றவர் என கழற்றி விட்ட திரிமன்னவை, ஆடும் அணியில் 11 வீரர்கள் இல்லையென்பதால் இணைக்கிறார்களோ தெரியவில்லை. தான் சர்வதேச கிரிக்கெட்டிற்கு பொருத்தமில்லையென்பதை அவர் மீண்டும் நிரூபித்து, 4 ஓட்டங்களுடன் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார்.

ப்ரோட்டின் பந்தில் திரிமன்ன ஆட்டமிழந்த போது இலங்கை 16 ஓட்டங்களை சேர்த்திருந்தது.

அண்மைக்காலமாக முட்டை மீது முட்டையாக சேகரித்து வரும் குசல் மெண்டிஸ் களமிறங்கினார்.

ப்ரோட்டின் அதே ஓவரில் 2 பந்துகளை மட்டும் சந்தித்து டக்அவுட்டானர். இலங்கை 16/2.

பின்னர் குசல் பெரேரா 20, அஞ்சலோ மத்யூஸ் 27, சந்திமால் 28, தசுன் சானக 23, ஹசரண்க சில்வா 19 ஓட்டங்களை சேகரித்தனர்.

46.1 ஓவர்களை மட்டுமே சந்தித்த இலங்கை முதல் இன்னிங்ஸில் 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் இங்கிலாந்தின் 23 வயதான இளம் வீரர் டெம் பெஸ் 30 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்களையும், ப்ரோட் 20 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர், முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து முதல்நாள் ஆட்ட முடிவில், 2 விக்கெட்டை மட்டுமிழந்து 127 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தொடக்க வீரர்கள் கிரேப்ளி 8, சிப்லி 6 ஓட்டங்களுடன் எம்புல்தெனியவில் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து 17/2 என ஆன போதும், பின்னர் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் ஜோ ரூட், ஜொனி பரிட்ஸோ இணை, 110 ஓட்டங்களை தமக்குள் பகிர்ந்து கொண்டனர்.

ஜோ ரூட் 115 பந்துகளை சந்தித்து 5 பௌண்டரிகளுடன் 66 ஓட்டங்களுடனும், ஜொனி பரிட்ஸோ 91 பந்துகளில் 2 பௌண்டரிகளுடன் 47 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

18 ஓவர்கள் பந்துவீசிய எம்புல்தெனிய 55 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here