800 விக்கெட்டை நெருங்க யாருக்காவது வாய்ப்புண்டா?: முரளி சொன்ன பதில்!

கிரிக்கெட்டில் இப்போதுள்ள சுழற்பந்துவீச்சாளர்களில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினால் மட்டுமே 700 முதல் 800 விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்புள்ளது. அவுஸ்திரேலியாவின் நதன் லயன் மீது நம்பிக்கை இல்லை என சுழல் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பிரிஸ்பேனில் நாளை இந்தியா, ஆஸி அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் களமிறங்கு ஆஸி. சுழற்பந்துவீச்சாளருக்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை மேல் எடுத்து இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அதைத் தொடர்ந்து ஆஸி. முன்னாள் வீரர் ஷேன் வோர்ன் (708), இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே (619) ஆகியோர் உள்ளனர்.

முத்தையா முரளிதரன் லண்டனில் வெளியாகும் டெலிகிராப் நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கிரிக்கெட் உலகில் இன்றுள்ள சுழற்பந்துவீச்சாளர்களில் 700 முதல் 800 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உள்ளவராக நான் இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வினை மட்டுமே பார்க்கிறேன். அஸ்வின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர். அஸ்வினைத் தவிர்த்து மற்ற இளம் பந்துவீச்சாளர்கள் யாரும் அந்த சாதனையை நிகழ்த்துவார்கள் என நான் நினைக்கவில்லை.

ஆஸி. வீரர் நதன் லயன் கூட இந்த சாதனையை நிகழ்த்த முடியாது. அப்படி அவர் மீது நம்பிக்கையும் இல்லை. இப்போதுதான் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இனிமேல் அதிகமான போட்டிகளில் விளையாடினால்தான் இலக்கை எட்ட முடியும்.

நான் விளையாடும்போது கிரிக்கெட் போட்டிகளி்ல சமநிலை இருந்தது. ஆனால், இன்று ஒருநாள், டி20 போட்டிகள் வந்தபின் துடுப்பாட்ட வீரர் சார்பாக கிரிக்கெட் மாறிவிட்டது. நான் விளையாடும்போது, ஆடுகளம் நன்றாக தட்டையாக அமைக்கப்படும்,

பந்துவீச்சாளர்களுக்கும், துடுப்பாட்ட வீரர்களுக்கும் சமஅளவு ஒத்துழைக்கும். 3 நாட்களில் ஆட்டத்தை முடிக்க முயற்சி எடுப்போம், சவால் நிறைந்ததாக இருக்கும். பந்துவீச்சாளர்கள் அதிகமான சிரமங்கள் எடுத்து, கடினமாக உழைத்து ஆட்டத்தை விரைவாக முடிக்க முயல்வார்கள்.

ஆனால்,இப்போதுள்ள நிலையில் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்கள் லைன்-லென்த்தில் நீண்டநேரம் வீசினால்தான் 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். ஏனென்றால், துடுப்பாட்ட வீரர்கள் தாக்குதல் ஆட்டம் ஆடாமல் நீண்டநேரம் நிலைத்து ஆட முடியாது.

சுழற்பந்துவீச்சாளர்கள் சரியான இடத்தில் பீல்டர்களை நிறுத்தி, லைன்-லென்த்தில் பந்துவீசினால், எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். அதற்கான சாத்தியங்கள் இப்போது இருக்கின்றன.

வேகப்பந்துவீ்ச்சாளர்களைவிட சுழற்பந்துவீச்சாளர்கள் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த முடியும், ஆனால், பீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்துவதும், கடினமாக உழைப்பதும் அவசியம்.

இவ்வாறு முரளிதரன் தெரிவி்த்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here