பேருந்தில் பயணிக்கும் மாணவர்களுக்கு ஹட்டன் பொலிஸார் அறிவுறுத்தல்

ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து பேருந்தில் பயணிக்கும் மாணவர்களை கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக அவர்களை தெளிவூட்டும் வேலைத்திட்டம் ஒன்றினை ஹட்டன் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் இன்று (13) திகதி ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் நடைபெற்றன.

இதன் போது மாணவர்கள் சமூக இடைவெளி பேணுதல், பஸ்களுக்கு ஏறும் போதும் இறங்கும் போதும் ஒரு மீற்றர் இடைவெளி கடைப்பிடித்தல், குழு ஒன்று கூடுதலை தவிர்த்தல், முடிந்தளவு தொற்று நீக்கி பயன்படுத்துதல், முகக்கவசம் கட்டாயம் அணிதல் போன்ற விடயங்கள் இதன்போது தெளிவுப்படுத்தப்பட்டதுடன் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் போது கட்டாயம் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து பஸ் நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் குறிப்பிட்ட பிரதேச மக்களை மாத்திரம் ஆசனங்களுக்கு மாத்திரம் அமரச் செய்து சேவையில் ஈடுப்பட்டதனால் குறித்த வீதியில்; இடை இடையே இறங்கும் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் பஸ்களுக்கு அனுமதிக்கப்படாததன் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

இது குறித்து பெற்றோர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இன்று ஆசனத்திற்கு மாத்திரம் பஸ்களில் பயணிகளை கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் போதிய அளவு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை. நான் எனது மகளை கூட்டிக்கொண்டு நோர்வூட் செல்ல வேண்டும். ஆனால் நோர்வூட் பகுதிக்கோ அதற்கு இடையில் இறங்குபவர்களுக்கோ பஸ்கள் கிடையாது அவ்வாறாயின் அப்பகுதிக்கு செல்லும் பிள்ளைகள் எவ்வாறு வீடு செல்வது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை பொறுப்பு வாய்ந்தவர்கள் எடுக்க வேண்டும்  என தெரிவித்தார்.

தோட்டப்பகுதியில் உள்ள அதிகமான பிரதேசங்களுக்கு ஓரிரு பஸ்கள் மாத்திரம் தான் சேவையில் ஈடுபடுவதாகவும், அது பழுதடைந்தால் அப்பிரதேசத்திற்கு செல்லும்; முழு பொது மக்களையும் ஒரு பஸ்ஸில் ஏற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், ஆசனத்திற்கு மாத்திரம் எடுத்துச் சென்றால் பொது மக்களும் பஸ் உரிமையாளர்களும்; பாதிக்கப்படுவதாகவும் பலர் கருத்து தெரிவித்தனர்.

எது எவ்வாறான போதிலும் மலையகப்பகுதியினை பொறுத்த வரையில் அதிகமான பிரதேசங்களுக்கு குறிப்பாக மஸ்கெலியா சாமிமலை, பொகவந்தலாவ, போடைஸ், சாஞ்சிமலை புளியாவத்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு போதியளவு பஸ் இல்லாததன் காரணமாக இந்த சுகாதார நடைமுறைகள் கடைபிடிப்பு மிகவும் கடினமான விடயம் என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் சரியான திட்டங்களை தீட்டி பொது மக்கள் மற்றும் மாணவர்களை பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here