யேர்மனிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்துடைத்ததை கண்டித்து மாணவ சமூகம், மக்கள் அதிரடியாக போராட்டத்தில் குதித்தனர். நொடிப்பொழுதில் தாயக உறவுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் நாடுகளிலும் இளையோர்கள் சமூக வலைத்தளங்களில் தாயக நிலைமையை வெளிக்கொண்டு வந்தார்கள்.

அந்தவகையில் இன்று காலை 9 மணிக்கு யேர்மன் தலைநகர் பேர்லினில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக தமிழ் மக்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதாதைகளை தாங்கிய வண்ணம் அரசை கண்டிக்கும் முகமாக நிகழ்வில் கலந்துகொண்ட மக்களால் கோசங்கள் எழுப்பப்பட்டது. தமிழ் இளையோர் அமைப்பின் அறிக்கை யேர்மன் மொழியில் வாசிக்கப்பட்டு, தொடர்ந்தும் தூதரகத்தை நோக்கி தமது கோபத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் முகமாக கோசங்கள் முழங்கியது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தமது முழுமையான ஆதரவை தாயகத்தில் போராடும் மாணவ சமூகத்திற்கு வழங்கும் உணர்வோடு தமது கடும் குளிரையும் பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைப்பு விடையத்தை தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையும் இணைந்து யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கும் அத்தோடு இலங்கை தொடர்பாக பணிபுரியும் பல்வேறு செயற்குழுவை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here