முல்லைத்தீவு முழுமையான முடக்கம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்றைய தினம் வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஹர்த்தாலை ஆதரிக்கும் முகமாக முல்லைத்தீவிலும் அனைத்து பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு தனியார் போக்குவரத்துகள் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டு பூரண ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு முள்ளியவளை புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் விசுவமடு உடையார்கட்டு மாங்குளம் மல்லாவி துணுக்காய் பாலிநகர் பாண்டியன்குளம் உள்ளிட்ட நகர் பகுதிகள் மற்றும் அதனை அண்டிய அனைத்து பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்களுடைய போக்குவரத்து சேவைகள் அனைத்தையும் முற்றாக நிறுத்தி இந்த ஹர்த்தாலுக்கு தங்களுடைய பூரண ஆதரவை வழங்கி வருகின்றனர். மாவட்டத்தில் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை பாடசாலைகள் இயங்கினாலும் மாணவர்களின் வரவு குறைவான நிலை காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் நகர்ப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாக காணப்படுவதோடு அரச திணைக்களங்களும் வங்கி சேவைகளும் இடம் பெற்று வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு முற்றுமுழுதாக முடங்கியுள்ள நிலையை அவதானிக்க முடிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here