கோட்டாவின் உரை எனது உயிருக்கு அச்சுறுத்தல்: பொலிஸ்மா அதிபருக்கு கடிதமெழுதினார் ஹரின் பெர்னாண்டோ!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று ஆற்றிய உரை தனது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ. இது தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொலிஸ்மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸ்மா அதிபருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ எழுதிய கடிதத்தில்,

“நேற்று, அம்பாரையின் உஹனவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஜனாதிபதி நந்தசேன கோட்டபய ராஜபக்ஷ கருத்துக்களை வழங்கிய வீடியோ காட்சிகளைக் கண்டேன்.
ஜனாதிபதி என்னை பெயர் குறிப்பிடுகிறார். பாராளுமன்றத்தில் நான் ஆற்றிய உரைகளை குறிப்பிடுகிறார். அதில் நான் அவரது முதல் பெயர் நந்தசேனவைக் குறிப்பிட்டேன்.

தனக்கு அமைதியான பக்கமும் இருண்ட பக்கமும் இருப்பதாக ஜனாதிபதி கூறினார்.
மேலும் அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்திலிருந்த தனது இருண்ட பக்கங்களுக்குத் திரும்பும் திறன் கொண்டவர் என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பயங்கரவாத கொடுங்கோலருக்கும், பாராளுமன்றத்தில் பேச்சு சுதந்திரத்திற்கான தனது அடிப்படை உரிமையைப் பயன்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் வேறுபாடு காட்ட ஜனாதிபதி தவறிவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

“நான் ஒருபோதும் பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொள்ளவில்லை என்பதை அவருக்கு நினைவூட்ட வேண்டும். தமிழ் மக்கள் வாக்களிப்பதைத் தடுக்க நான் ஒருபோதும் பயங்கரவாதிகளுக்கு இலஞ்சம் கொடுக்கவில்லை. இதுவரை வாழ்ந்த எந்த மனிதனையும் விட அதிகமான காவல்துறை அதிகாரிகளை கொலை செய்த நான் கருணா அம்மானைத் தழுவவில்லை. அனைத்திற்கும் மேலாக, நான், எப்போதும் இலங்கையின் குடிமகனாக இருக்கிறேன். வேறு எந்த நாட்டை சேர்ந்தவனும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

அவர் விரும்பாத விஷயங்களை தொடர்ந்து கூறினால், பெர்னாண்டோவை “ஒரு நாய் போலக் கொல்ல” முடியும் என்பதை தெளிவுபடுத்துகிறார் என்று கடிதம் மேலும் குறிப்பிடுகிறது.

ஜனாதிபதி நந்தசேன கோட்டபய ராஜபக்ஷ அச்சுறுத்தலின் தீவிர தன்மையைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புப் படைகளின் தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் உள்ளவர், அவர் எனக்கு தீங்கு செய்ய வல்லவர் என்று கூறுவதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

அவரது முதல் பெயரை குறிப்பிட்டதற்காக கோட்டபய பொங்கியெழுந்தது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் குறிப்பிட்டள்ளார்.

நீண்டகாலமாக ஜனாதிபதிகள் பெயர்களால் அல்லது முதலெழுத்துக்களால் அழைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். ஜே.ஆர், மஹிந்த, பிமேதாச, டி.பி, சந்திரிகா, மஹிந்த, சிறிசேன என அழைக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். அந்த பெயர்களை பாவித்த யாருக்கும் உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கவில்லை. ஜனாதிபதியை வன்முறையை நாடுமாறு பௌத்த மதகுருக்கள் உண்மையிலேயே அறிவுறுத்தியிருப்பார்கள் என நம்புவது மிக கடினமானது. கிறிஸ்தவராக உள்ள எனது புரிதல் என்னவெனில், பௌத்தம் வன்முறையை தவிர்த்து, அகிம்சையையே போதிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது ஜனாதிபதியை விமர்சித்த பல ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளனர் அல்லது படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் அவர் வேதனையுடன் அறிந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டு சரியாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி தனது துப்பாக்கிகளை என் மீது திருப்பியது முரண்பாடாக இருக்கிறது. அச்சமின்றி தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்திய அத்தகைய ஒருவர் படுகொலை செய்யப்பட்டார் என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்த 2.8 மில்லியன் வாக்காளர்கள் சார்பாக சுதந்திரமாக பேச வேண்டிய கடமை உள்ளதால், அவரது உயிருக்கு “கடுமையான அச்சுறுத்தலுக்கு” ​​எதிராக போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை தாமதமின்றி ஏற்பாடு செய்யுமாறு பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“ஒரு பயங்கரவாதியைப் போல தூக்கிலிடப்படுவேன் என்ற பயமின்றி நான் விரும்புவதைச் சொல்வது எனது அடிப்படை உரிமை. நீங்கள் இலங்கை குடியரசின் பொலிஸ்மா அதிபர் என்பதை நினைவூட்ட வேண்டும், நந்தசேன கோட்டபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட ஊழியர் அல்ல. பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவது, வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பது நான் உங்களிடம் கேட்கும் தனிப்பட்ட அனுகூலமல்ல. குடியரசின் அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான உங்கள் முழுமையான கடமையின் ஒரு பகுதியாகும். உள்நாட்டுப் போரின் முடிவிற்கு பின்னர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரின் முதல் படுகொலையை மேற்பார்வையிட்ட ஐ.ஜி.பி.யாக நீங்கள் நினைவுகூரப்படுவதை விரும்பமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன், ”என்று அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here