உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 3 இலங்கையர் மீது அமெரிக்காவில் வழக்கு!

இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சதி திட்டமிட்ட பயங்கரவாத குழுவுக்கு உதவியதாக மூன்று இலங்கையர்கள் மீது அமெரிக்காவில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொஹமட் நௌபர், மொஹமட் அன்வர் முகமது ரிஸ்கான் மற்றும் அஹமட் மில்ஹான் ஹயத்து மொஹமட் ஆகியோர் சதித்திட்டம் தீட்டியதாகவும், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பிற்கு பொருள் ஆதரவை வழங்க முயற்சித்ததாகவும் கடந்த மாதம் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

இஸ்லாமிய அரசை ஆதரித்த இலங்கையில் உள்ள ஒரு குழுவுடன் இந்த மூன்று பேரும் தொடர்பிலிருந்தனர்.

ஏப்ரல் 21, 2019 அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் மீது தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் தற்கொலை குண்டுவெடிப்பு நடத்தினர்.

“இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ்” என்று தன்னை அழைத்துக் கொண்ட குழுவிற்கான முன்னணி பிரச்சார முயற்சியில் ஈடுபட்டதாக நௌபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு, இராணுவ வகை பயிற்சிக்கு ஏற்பாடு செய்த குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.

தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை தயாரிக்க உதவியதாக ரிஸ்கன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் மொஹமட் இலங்கையில் ஒரு பொலிஸ் அதிகாரியை ஆயுதம் பெறுவதற்காக கொலை செய்ததாகவும், சந்தேகத்திற்குரிய தகவலறிந்தவரை சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

“உலகில் எங்கிருந்தும் அமெரிக்கர்களை குறிவைக்கும்போது பயங்கரவாதிகள் நீதியை எதிர்கொள்வதை உறுதி செய்ய அமெரிக்கா தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் என்பதை இந்த வழக்கு தெளிவாக நிரூபிக்கிறது” என்று மத்திய மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் நிக் ஹன்னா அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here