பருத்தித்துறையில் நேற்று முன்தினம் தென்னிலங்கை மீனவர்களை மடக்கிப்பிடித்து, உள்ளூர் மீனவர்கள் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். அந்த போராட்டம் குறிப்பிடக்கூடிய பெறுபேற்றை எட்ட முடியாமல், எந்த உத்தரவாதத்தையும் பொறுப்பான தரப்பிடமிருந்து பெற முடியாமல் போனதற்கு ஈ.பி.டி.பியின் உள்ளூர் பிரமுகர்களே காரணமென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மடக்கிப்பிடிக்கப்பட்ட தென்னிலங்கை மீனவர்களை விடுவிக்கவும், பதிலாக மீனவர்களிற்கு சில உத்தரவாதத்தை தரவும் நீரியல் வள திணைக்களம் தயாராக இருந்த நிலையிலும், அதற்கான வாய்ப்புக்களை நிராகரித்து, இறுதியில் பொலிசார் தலையிட்டு தென்னிலங்கை மீனவர்களை பலாத்காரமாக அழைத்து செல்ல வைத்ததில் போராட்டம் முடிவடைந்துள்ளது.
பருத்தித்துறை மீனவர் சமாசத்தின் தலைவர் ராசா (தொண்டமனாறு), செயலாளர் குமார் (பருத்தித்துறை) இருவரும் ஈ.பி.டி.பியின் அங்கத்தவர்கள். சமாச தலைவர் ஈ.பி.டி.பி சார்பில் தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.
நேற்று முன்தினம் நடந்த மடக்கிப்பிடிப்பையும் சமாசத்தின் தலைமையிலேயே மேற்கொண்டிருந்தனர். தென்பகுதியை சேர்ந்த எட்டு மீனவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டிருந்தார்கள்.
தென்பகுதி மீனவர்கள் பிடிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் எஸ்.சுகிர்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் எஸ்.கஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர். இதன்போது, “அரசியல்வாதிகள் இங்கு வர வேண்டாம்“ என ஈ.பி.டி.பி சார்பான மீனவர்கள் குழப்பம் விளைவிக்க முயன்றனர்.
எனினும், பருத்தித்துறையிலுள்ள ஈ.பி.டி.பி உள்ளூராட்சி மன்ற பிரதிநிதியான பெண் ஒருவரை மீனவர் சமாச பிரதிநிதிகள் தொலைபேசியில் சம்பவ இடத்திற்கு அழைத்திருந்தார்கள்.
கடற்றொழில் அமைச்சர் சம்பவ இடத்திற்கு வந்தால் மாத்திரமே மடக்கிப் பிடிக்கப்பட்ட தென்னிலங்கை மீனவர்களை விடுவிக்க முடியுமென சாத்தியமே இல்லாத கோரிக்கையை மீனவர் சமாச பிரதிநிதிகள் முன்வைத்தார்கள்.
சம்பவ இடத்திற்கு வந்த யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர், சில உத்தரவாதங்களின் அடிப்படையில் தென்னிலங்கை மீனவர்களை விடுவிக்க கேட்டுக்கொண்டார். இறுதி முடிவொன்று எட்டப்படும் வரையிலும் சட்டவிரோத மீன்பிடி முறைகளிற்கு தற்காலிக தடைவிதிக்கலாம், அதை தமது திணைக்களம் வலுவாக கண்காணிக்கும் என நேரடியாக மீனவர்களிற்கு உத்தரவாதம் வழங்க தயாராக இருப்பதாக கூறினார். எனினும், அமைச்சர் நேரில் வந்தால் மாத்திரமே தென்னிலங்கை மீனவர்களை விடுவிக்க முடியுமென சமாச தலைவர்கள் கறாராக கூறினர்.
இறுதியில் பொலிசார் தலையிட்டு, தென்னிலங்கை மீனவர்களை விடுவிக்க முயற்சித்த போது, பலாத்கார முறையை பாவித்தது. இந்த சந்தர்ப்பத்தின் சமாச பிரமுகர்கள் யாரும் அந்த இடத்தின் முன்வரிசையில் நிற்கவில்லை.
சமாச பிரதிநிதிகளின் திட்டமிடலில்லாத போராட்டமே, மீனவர் விவகாரத்தை சிக்கலாக்குவதாக உள்ளூர் மீனவர்கள் அதிருப்தியடைய ஆரம்பித்துள்ளனர்.
பருத்தித்துறை உள்ளிட்ட வடக்கு முழுவதிலுமுள்ள மீனவர்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று- சுருக்கு வலை தொழிலை தடைசெய்ய வேண்டுமென்பது. பருத்தித்துறை மீனவர்களால் முன்வைக்கப்படும் பிரதான கோரிக்கைகளில் இதுவுமொன்று. ஆனால், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்திற்கு சொந்தமான பலநாள் கலமொன்று முறையான சுருக்கு வலை தொழில் அனுமதி பெற்று, தொழிலில் ஈடுபடுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் பருத்தித்துறை சமாசத்தினர் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லாமல், மீனவர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்ததில் அதிருப்தியடைந்த கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் இந்த இரகசியத்தை அவிழ்த்து விட்டுள்ளார்.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம் சுருக்கு வலை தொழிலிற்கான சட்டபூர்வ அனுமதியை பெற்று வைத்துள்ளது. சம்மேளனத்திற்கு சொந்தமாக பலநாள் கலமொன்று, அந்த அனுமதியை வைத்து சுருக்கு வலை தொழிலில் இன்று வரை ஈடுபட்டு வருகிறது. தனியார் மீனவர் ஒருவரிடம் குத்தகைக்கு வழங்கப்பட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
சுருக்குவலை தொழில் உள்ளிட்ட சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம் அண்மையில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. அது தொடர்பான கலந்துரையாடலிற்கு சென்ற மாவை சேனாதிராசாவையும் ஈ.பி.டி.பி ஆதரவாளர்கள் அவமானப்படுத்தியிருந்தனர்.
அண்மையில் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்திருந்த போது, மீனவர்கள் கறுப்புக்கொடி போராட்டம் நடத்த தயாராக இருந்தபோது, மீன்பிடி அமைச்சருடன் இரவிரவாக நடந்த பேச்சு வெற்றியளித்ததாக குறிப்பிட்ட சம்மேளன தலைவர் எஸ்.தவச்செல்வம், மறுநாள் ஜனாதிபதியின் நிகழ்வு மேடையில் ஏறி, நினைவுப்பரிசொன்றையும் வழங்கியிருந்தார்.
இதேபோல, உடுத்துறை மீனவர் சமாசத்திற்கு சொந்தமான பலநாள் கலமொன்றும் சட்டபூர்வ அனுமதி பெற்று சுருக்குவலை தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
சுருக்கு வலை தொழிலை நிறுத்த வேண்டுமென அப்பாவி, ஏழை மீனவர்கள் போராடிக் கொண்டிருக்க, சமாசங்களும், சம்மேளனமும் அவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வியை இந்த சம்பவங்கள் எழுப்புகின்றன.