இலங்கையில் கால்நடைகளில் பரவும் புதிய வகை வைரஸ்: ஆராய குழு நியமனம்!

இலங்கையில் கால்நடைகளில் பரவும் புதிய வைரஸ் தொற்று நோய் குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக கால்நடை வள இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது மாடுகளுக்கு இடையில் வேகமாக பரவும் வைரஸ் குறித்து மிருக வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த தொற்று காரணமாக மிருக பண்ணைகளின் மிருக வளர்ப்பு, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கெஃப்ரி பொன்ஸ் என்ற வைரஸ் ஒன்றே இவ்வாறு பரவி வருகின்றது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தொற்று ஏற்படும் மாடுகளின் உடலில் தழும்புகள் ஏற்படுதல், காய்ச்சல் ஏற்படுதல், உணவுகளை தவிர்த்தல் உள்ளிட்ட மேலும் சில அறிகுறிகள் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியுள்ள போதிலும், இதனால் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாது என கூறப்படுகின்றது.

இந்த தொற்றுக்குள்ளாகியுள்ள பசுக்களிடமிருந்து பால் சுரப்பது வெகுவாக குறைவடையும் அதேவேளை, பசுக்கள் கர்ப்பம் தரித்தலும் குறைவடையும் என கூறப்படுகின்றது.

இது எருமைகள், ஆடுகள், செம்மறி போன்ற விலங்குகளையும் பாதிக்கலாம்.

இந்த நோய் தாக்கத்திலிருந்து கால்நடைகளை பாதுகாத்துக் கொள்வதற்கான தடுப்பூசிகளை இறக்குமதி செய்து தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மாடுகளுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், அது தொடர்பில் அரச மிருக வைத்தியருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் இலங்கையில் 2020 நவம்பரில் பதிவாகியுள்ளது. மேலதிக ஆய்விற்காக இதன் மாதிரிகள் இங்கிலாந்தில் உள்ள பிரைபிரைட் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இது கால்நடைகளின் இரத்தத்தை உறிஞ்சும் நுளம்புகள் மூலம் பரவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. எந்த வயதுடைய விலங்குகளையும் இந்த நோய் தாக்கலாம்.

இந்த நோய் முன்னர் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் பதிவாகியுள்ளது. தெற்காசியாவில், இது முதன்முதலில் நேபாளம், பூட்டான், இந்தியா மற்றும் மியான்மரில் 2019 இல் கண்டறியப்பட்டது. கடந்த நவம்பரில் இலங்கையிம் பரவியது.

வடமாகாணத்திலேயே இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. தீவு பகுதிகள் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இதன் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது.

தவிரவும், கிளிநொச்சி வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அனுராதபுரம், புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய இடங்களுக்கும் பரவியுள்ளது.

இந்த வைரஸினால் இன்றுவரை எந்த இறப்பும் பதிவாகவில்லை. ஆனால் மற்ற நாடுகளில் தொற்றுக்குள்ளான கால்நடைகளில் சுமார் 5 சதவீதம் இறந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here