அலுவலக ஸ்தம்பித நிலையிலும் நிவாரண வினியோகத்தில் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மும்முரம்

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி செய்லான் வீதி தொடக்கம் கல்முனை நகர் வாடி வீட்டு வீதி வரைக்கும் உள்ள 11 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 3411 குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற உலர் உணவுப் பொதிகளை வினியோகிக்கும் நடவடிக்கைகள் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் நேற்று (07) மாலை முதல் இராணுவத்தின் உதவியோடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இன்று (08) அலுவலகம் முழுமையாக ஸ்தம்பித நிலையில் உள்ளதுடன் உத்தியோகத்தர்கள் வருகை மந்தமான நிலையில் உள்ளதை அவதானிக்க முடிந்தது.

இருந்தும் பிரதேச செயலகத்தினால் இரண்டு வாரங்களுக்கு தேவையான பத்தாயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் கிராம சேவையாளர்கள் ஊடாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு மூன்றரை கோடி ரூபா நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக இதன் போது பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதன் போது நிவாரண பொருட்கள் வினியோக செயற்பாடுகளில் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அலுவலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டு நிவாரணப் வழங்கும் செயற்பாடுகளில் மிக மும்முரமாக செயற்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here