ஜோ பிடனின் வெற்றி அறிவிப்பை குழப்ப களேபரத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள்: 4 பேர் பலி

அமெரிக்கா நாடாளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்டு, அதற்குள் நுழைய முயன்ற ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே நேற்று ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் உள்பட்ட 4 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர்.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும் 20ஆம் திகதி முறைப்படி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடாளுமன்றத்தில் நேற்று நடந்தது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

அப்போது அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அவர்களை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் பொலிஸார் தடுத்தபோது, பொலிஸாருக்கும், ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனால் கூட்டத்தைக் கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனர். இதனால், பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான பொலிஸார் காயமடைந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ட்ரம்பின் ஆதரவாளர்கள் கையில் ஆயுதங்களுடனும், சிலர் துப்பாக்கிகளுடன் இருந்து பொலிஸாரைத் தாக்கினர். இதனால், கூட்டத்தைக் கலைக்கவும், தற்காப்புக்காகவும் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு பெண் உயிரிழந்தார். இதேவேளை மண்டபத்திற்கு வெளியில் இருந்த மைதானத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். அவர்கள் தனிப்பட்ட மருத்துவ அவசரநிலை காரணங்களால் உயிரிழந்தனர்.

உயிிரிழந்த பெண் அஷ்லி பாபிட் என அடையாளம் காணப்பட்டா். அவரது மார்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் விமானப்படையை சேர்ந்தவர். ட்ரம்பை வெறித்தனமாக ஆதரித்தார்.

இதுகுறித்து வோஷிங்டன் டிசி கட்டிட தலைவர் ரொபர்ட் கான்டி கூறுகையில் “ நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் பெலிஸார் மீது தாக்குதல் நடத்த ரசாயன ஆயுதங்களையும், பைப் வெடிகுண்டு, துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்தார்கள். தற்காப்பு நடவடிக்கையாக பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்” எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு ஒருமணி நேரத்துக்கும் மேலாக ஆதரவாளர்கள் போராட்டம் நடத்துவதைப் பார்த்த ஜனாதிபதி ட்ரம்ப் அமைதியாகக் கலைந்து செல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுள்ள அனைவரும் அமைதியாக கலைந்து செல்லுங்கள். வன்முறை வேண்டாம். நினைவில் கொள்ளுங்கள், சட்டம் ஒழுங்கிற்கு நமது கட்சிதான் பொறுப்பு. சட்டத்தை மதித்து கலைந்து செல்லுங்கள். பொலிஸாருக்கும், சட்டத்துக்கும் மதிப்பு கொடுங்கள். அமைதியாக இருங்கள்” எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள் செயலைப் பார்த்து ஜனாதிபதியாக பதவி ஏற்க இருக்கும் ஜோ பைடன் அதிர்ச்சி அடைந்தார். அமெரிக்க மக்களுக்கு ஜோ பைடன் ஆற்றிய உரையில் “இந்த நேரத்தில் அமெரிக்க ஜனநாயகம் எப்போதுமில்லாத தாக்குதலைச் சந்தித்துள்ளது. இந்த நவீன காலத்தில் இதுபோன்ற சம்பவத்தை பார்த்தது இல்லை. நாடாளுமன்றத்தின் மீதும், சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். மக்கள் பிரதிநிதிகள் மீதான தாக்குதல், அவர்களைப் பாதுக்காக்க வேண்டும்.

இந்த குழப்பமும், போராட்டமும் அமெரிக்காவை ஒருபோதும் பிரதிபலிப்பதில்லை என்பதை தெளிவாகக் கூறுகிறேன். நாம் யார் என்பதை இது பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. சிறிய அளவிலான குழுவினர் மட்டுமே சட்டத்தை மீறுகிறார்கள். இது எதிர்ப்பு அல்ல. ஒழுங்கின்மை, குழப்பம். இது முடிவுக்கு வர வேண்டும்.

ஜனாதிபதி ட்ரம்ப் உடனடியாக தொலைக்காட்சியில் மக்களுக்கு உரையாற்றி, தான் ஏற்றுள்ள உறுதிமொழிக்கு ஏற்ப அரசியலமைப்புச் சட்டத்தை காக்கும் வகையில் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தற்போது 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here