கொரோனா தொற்றாளர்கள் திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்: எருக்கலம்பிட்டி தனிமைப்படுத்தப்பட்டது!

மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மன்னார் எருக்கலம் பிட்டி கிராமம் இன்று புதன் கிழமை காலை முதல் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் தெரிவித்தார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று புதன் கிழமை(6) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகயிவ் ஓர் அங்கமாக கடந்த திங்கட்கிழமை மன்னார் எருக்கலம் பிட்டியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனையின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரூக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதனை முடிவுகள் நேற்று செவ்வாய்க்கிழமை(5) மாலை கிடைக்கப்பெற்றது. இவர்கள் கடந்த 26 ஆம் திகதி புத்தளத்தில் இருந்து மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இவர்களுடைய குடும்பத் தலைவர் புத்தளத்தில் இருந்து கொழும்பிற்கு சென்று கடந்த 29 ஆம் திகதி மீண்டும் புத்தளத்திற்கு வந்த போது கொச்சிக்கடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது குறித்த குடும்பத் தலைவர் தொற்று உள்ளவர் என அடையாளம் காணப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இவருடைய குடும்ப உறுப்பினர்கள் 6 பேரூம் மன்னார் எருக்கலம் பிட்டியில் உள்ள அவர்களது வீடுகளில் சுய தனிமைப் படுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையின் போது குறித்த குடும்பத்தலைவரின் மகள், மூன்று மகன்கள், மகளது கணவர் ஆகிய 5 பேரூக்கும் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த குடும்பத்தலைவரின் மனைவிக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.

5 பேரில் 3 மகன்கள் மற்றும் மகளினுடைய கணவர் ஆகிய 4 பேரூம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மகள் தம்பதெனியாவில் உள்ள கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளார்.

இவர்கள் 26 ஆம் திகதி மன்னார் எருக்கலம் பிட்டி கிரமத்திற்கு வந்து 27 ஆம் திகதி திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்தமையினால் குறித்த திருமண வீட்டிற்கு சென்றவர்கள் மற்றும் இவர்களுடன் தொடர்பு பட்டவர்கள் ஆகியோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை முடிவடையும் வரை மன்னார் எருக்கலம் பிட்டி கிராமம் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here