நல்ல நேரம் பார்க்க ஜோதிடரிடம் சென்றவர், மதுக்கடையை கண்டு நிதானமிழந்ததால் பெருந்தொகை பணத்தை இழந்தார்!

கம்பளையில் முன்னாள் கடற்படை வீரர் ஒருவரிடம் இருந்து பெருமளவு பணத்தை கொள்ளையிட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் முன்னாள் கடற்படை வீரர்களிடமிருந்து 318,000 ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.

கம்பளை நகரத்திற்கு கடந்த 28ஆம் திகதி வந்த முன்னாள் கடற்படை வீரர், வீடு நிர்மாணப் பணிக்காக வங்கியிருந்து 310,000 ரூபாயை எடுத்துள்ளார். அவரிடம் ஏற்கனவே பத்தாயிரம் ரூபாய் இருந்துள்ளது.

வங்கியிலிருந்து பணம் எடுத்த பின்னர் வீடு கட்டுவதற்கான கம்பியை வாங்குவதற்காக வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர் கோரிய கம்பிகளை மறுநாள் பெறலாமென வர்த்தக நிலையத்தினர் தெரிவித்தனர். பின்னர் வீடு கட்டுவதற்காக நல்ல நேரத்தை தெரிந்து கொள்வதற்காக ஜோதிடர் ஒருவரிடம் சென்றுள்ளார்.

மதியம் 12 மணிக்கு பின்னர் அவர் சென்றதால், இது ஜோதிடத்திற்கு பொருத்தமான நேரம் அல்ல என ஜோதிடர் தெரிவித்துள்ளார்.

நகரத்துக்கு வந்த 2 நோக்கங்களும் நிறைவுறாத நிலையில் அருகில் உள்ள மதுக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு 2000 ரூபாய்க்கு மது அருந்தியுள்ளார். இதனால் போதையின் உச்சத்திற்கு சென்றவர், தனியார் பஸ் நிலைய பகுதியில் உள்ள சிகையங்கார நிலையத்துக்கு சென்றார். பின்னர் மது போதையில் அவர் அங்குமிங்கும் நடந்துள்ளார்.

அவரிடம் பணம் இருப்பதை அவதானித்த சிலர் அவர் போதையில் இருப்பதை தமக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணி, அவரை பின்தொடர்ந்தனர்.

பின்னர் தனியார் பஸ் நிலையத்தில் இருந்து இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் நிலையத்திற்கு அவர் சென்றபோது, அவரை பின் தொடர்ந்து அவருடன் நெருங்கிப் பழகி அவருக்கு உதவுவது போல பாசாங்கு செய்து தமது முச்சக்கரவண்டியில் அவரை ஏற்றியுள்ளனர்.

அவர் முச்சக்கரவண்டியில் நிலைகுலைந்து இருந்தபோது அவரிடம் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரை கீழே இறக்கி வைத்து விட்டு அவர்கள் தப்பிச் சென்றனர்.

நீண்டநேரம் அங்கே போதையில் இருந்தார். போதை தெளிந்த பின்னர் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை தெரிந்துகொண்டார். இதுதொடர்பாக கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் விக்கிரமரத்தினவின் வழிகாட்டலுக்கமைய, குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டார தலைமையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் 23, 27, 39 வயதுடைய திருடர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருடிய பணத்தில் புதிய முச்சக்கர வண்டி ஒன்றில் வாங்குவதற்காக 75,000 ரூபாய் முன்பணமாக அவர்கள் செலுத்தியுள்ளனர். அத்துடன் பணத்துடன் கண்டி நகருக்கு சென்று போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளனர்.

அவர்கள் நேற்று கம்பளை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here