மட்டக்களப்பில் 4 சபை நடவடிக்கைகளிற்கு தற்காலிக தடை: தவிசாளர்கள் பதவி இழக்கிறார்கள்; வாழைச்சேனை தவிசாளரின் தலைக்கு மேல் கத்தி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பிரதேசசபைகளின் நடவடிக்கைகளிற்கு தடைவிதித்து கிழக்கு மாகாண உள்ளூராட்சி  திணைக்களத்தினால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேசசபை, கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேசசபை, கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேசசபை, ஏறாவூர் நகரசபை ஆகியவற்றின் பாதீடு இதுவரை நிறைவேற்றப்படாமை, மற்றும் முறையற்ற நடவடிக்கைகள் காரணமாக அந்த சபைகளின் தலைவர்கள் பதவி இழக்கவுள்ளதாக தெரிய வருகிறது.

இது தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுனர் விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடவுள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் வரை, இந்த சபை நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாதெனவும், தவிசாளர் தனக்குரிய அதிகாரங்களை பயன்படுத்தக் கூடாதென மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம் கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

இந்த நான்கு சபைகளிற்கும் தீர்மானத்தை நாளை (6) கடிதம் மூலம் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அறிவிப்பார்.

உள்ளூராட்சி தேர்தலில் கோறளைப்பற்று பிரதேசசபையை பிள்ளையான் அணி கைப்பற்றியது. வாகரையை தமிழ் தேசிய கூட்டமைப்ப வெற்றிபெற்றது. ஏறாவூரில் ஐ.தே.க உறுப்பினர் தவிசாளரானார். ஆரையம்பதியில் சுயேட்சைக்குழு உறுப்பினர் தவிசாளரான போதும், பின்னர் பிள்ளையான் தரப்புடன் இணைந்து செயற்பட்டார்.

இதில் கோறளைப்பற்று தவிசாளர் விசாரணையின் பின்னர் தவிசாளர் மற்றும் தனது உள்ளூராட்சி உறுப்புரிமையையும் இழக்கலாமென குறிப்பிடப்படுகிறது. அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி சட்ட விதிகள், அறிவுறுத்தல்களை கணக்கிலெடுக்காமல் அவர் செயற்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன், சபையில் நிறைவேற்றப்படாத தீர்மானங்களையும் நிறைவேற்றியதாக குறிப்பிட்டு போலியான அறிக்கை சமர்ப்பித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

பாதீட்டை நிறைவேற்ற பல்வேறு முறையற்ற விதமான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருந்தார். பாதீட்டை நிறைவேற்ற பெரும்பான்மையை பெறும் நோக்கத்துடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 4 பேரை விதிமுறையை மீறி தடுத்தமை, சபை அனுமதியின்றி அபிவிருத்தி மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டமை உள்ளிட்ட விவகாரங்களில் அவர் விசாரணையை எதிர்கொள்வார் என தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here