உடையின்றி சாவகச்சேரி மருத்துவமனை மலசலகூடத்திற்கு முன்னால் வாழும் முதியவர்!


சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினர்கள் யாருமில்லாத அனாதரவான முதிவரை வைத்தியசாலை நிர்வாகம் உரிய நெறிமுறைகளை கடைப்பிடித்து பராமரிக்கவில்லை. வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிட சென்ற ஒருவர் இதை அவதானித்து, புகைப்படங்கள் எடுத்து தமிழ்பக்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இதையடுத்து, இது தொடர்பாக தமிழ்பக்கம் ஆராய்ந்ததில் மேலதிகமாக சில தகவல்களை பெற்றுள்ளது.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 119 இலக்க நோயாளர் காவு வண்டி சேவை மூலம், கடந்த வாரம் இந்த முதியவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாய் பேச முடியாத நிலையிலுள்ள இந்த முதியவரின் உறவினர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இவருக்கு எந்த நோயும் அடையாளம் காணப்படவில்லை. இருப்பினும், படுக்கையிலேயே மலம், சலம் கழிக்கும் பழக்கமுடையவராக இருக்கிறார்.

இதில் மிகப்பெரிய துயரம் என்னவென்றால், அவருக்கு எந்த மாற்றுடையும் வழங்கப்படவில்லை. தனது பழைய சேர்ட் ஒன்றையே இடுப்பில் கட்டியபடி ஒரு வாரமாக வைத்தியசாலை மலசலகூடத்திற்கு முன்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் நோயாளர் விடுதியொன்றின் மலசலகூடத்திற்கு முன்பாக கட்டில் போட்டு அவரை வைத்தியசாலை நிர்வாகம் தங்க வைத்துள்ளது.

அனாதரவாக வைத்தியசாலைக்கு வந்துள்ள முதியவர்களை, சமூக சேவைகள் உத்தியோகத்தர் மூலமாக முதியவர்களை பராமரிக்கும் இடங்களிற்கு அனுப்பி வைக்க வேண்டும். எனினும், இந்த முதியவர் ஒருவாரமாக அடிப்படை தேவைகளில் ஒன்றான உடை வழங்கப்படாமல், வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை சமூகசேவை உத்தியோகத்தரின் கவனத்திற்கு இது ஏன் கொண்டு செல்லப்படவில்லை?

உரிய நடைமுறைகளை பின்பற்றி அவரை காப்பகம் ஒன்றிற்கு ஏன் அனுப்பி வைக்கப்படவில்லை?

சாவகச்சேரி வைத்தியசாலையின் நோயாளர் விடுதிக்கு நோயாளர்களை பார்வையிட வரும் பொதுமக்கள் இந்த காட்சியை பார்ப்பதற்கு சிரமமாக இருப்பதாக குறிப்பிடுகிறார்கள்.

உரிய அதிகாரிகளே… இது உங்கள் கவனத்திற்கு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here