அலி பாபா நிறுவுனர் ஜாக் மா மாயம்!

சீனாவின் மிகப்பெரும் தொழிலதிபரான அலிபாபா நிறுவனர் ஜாக் மா காணாமல் போயுள்ளதாக இங்கிலாந்தின் த டெலிகிராப் பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மக்கள் பார்வையில் இல்லை.

சீனாவின் இணைய முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் ஜாக் மா காணாமல் போன நிலையில், அவர் சீன அரசினால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சீனா இதுவரை அதை உறுதிசெய்யவில்லை.

சீனாவைச் சேர்ந்த முன்னணி ஒன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபா. இதன் தலைவர் ஜாக் மா. சீனாவில் இ-கொமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந்தையை முழுவதுமாகத் தனதாக்கிக் கொண்டதன் மூலம் அலிபாபா 420 பில்லியன் டொலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்தது.

ஜாக் மாவும் இதன் மூலம் சீனாவின் முதல் பெரிய பணக்காரராக உயர்ந்தார். தற்போது அலிபாபா தனது சேவையை உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு தொழில்களிலும் விரிவுபடுத்தியுள்ளது. இந்த நிலையில் சமீபகாலமாக ஜாக் மாவுக்கும், சீன அரசுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. தனது நிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் சீன அரசின் செயல் பழமைவாதம் என்று ஜாக் மா விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து ஜாக் மாவுக்கு சீன அரசு பல இடையூறுகளை அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக ஜாக் மாவைக் காணவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

ஜாக் மா தனது நிறுவனம் மேற்கொண்ட ஆபிரிக்காவின் பிசினஸ் ஹீரோஸ் எனும் நிகழ்ச்சியின் இறுதி அத்தியாயத்தில் நீதிபதியாக கலந்து கொண்டார். அதுதான் அவர் பொதுவெளியில் தோன்றிய இறுதி நிகழ்வாகும். அதற்குப் பிறகு அவர் திரும்பவில்லை. இந்த நிகழ்ச்சி சிறந்த ஆபிரிக்க தொழில்முனைவோருக்கு 1.5 மில்லியன் பரிசுத் தொகை வழங்கியது.

ஜாக் மாவின் நிதி நிறுவனம் சார்ந்த ஒரு விவகாரத்தில், சீன அரசு ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது, நாட்டின் உயர்மட்ட சந்தை கண்காணிப்புக் குழு இ-கொமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் போட்டி எதிர்ப்பு நடைமுறைகள் குறித்து விசாரணையைத் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது.

ஒக்டோபரில்  ஷாங்காயில் ஒரு சர்ச்சைக்குரிய உரையை நிகழ்த்திய பின்னர் ஜாக் மாவின் குழு ஆய்வுக்கு உட்பட்டது. அங்கு புதுமைகளைத் தடுப்பதற்கான சீனாவின் விதிமுறைகளை அவர் விமர்சித்தார்.

நவம்பரில், ஷாங்காய் மற்றும் ஹொங்கொங் பங்குச் சந்தைகள் தனது உலகின் மிகப் பெரிய ஆரம்ப பொது சலுகையான 39.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை பங்குகளின் பட்டியலில் நிறுத்தியதால், ஜாக் மா பெரும் பின்னடைவை சந்தித்தார்.

இதையடுத்து சீன அரசுடன் ஜாக் மா நேரடியாக மோத ஆரம்பித்தார். இந்நிலையில் கடந்த மாதங்களாக அவர் பொதுவெளியில் தோன்றாதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here