கோவிஷீல்டு தடுப்பூசியை வெளியிட தயார் என இந்திய சீரம் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறது.
அதன் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். கோவிஷீல்டு தடுப்பூசியை இருப்பு வைக்க எல்லா இடர்களையும் இந்திய சீரம் நிறுவனம் எடுத்துக்கொண்டது. இறுதியில், அதற்கான விலை கிடைத்துள்ளது. இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பானது, செயல்திறன் கொண்டது. வரும் வாரங்களில் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், பிரதமர் மோடிக்கும், சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தனுக்கும், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கும், இதற்காக பங்காற்றிய அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.