கோறளைபற்று பிரதேச சபையின் (வாழைச்சேனை) தவிசாரது பதவி வறிதாகியதாக வர்த்தமானி அறிவிப்பு வெளியாக தயாராகிய நிலையில், அரசியல் தலையீடுகளினால் அதில் மாற்றம் ஏற்படலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் வரவு செலவு திட்டம் நிறைவேற்றாத சபைகளின் தலைவர்களின் பதவிகளை வறிதாக்கும் வர்த்தமானி தயாராகி வருவதாகவும், அதில் கோறளைபற்று பிரதேசசபை தவிசாளரை மட்டும் காப்பாற்றி விடவும் உச்சபட்ச அரசியல் தலையீடுகள் நடப்பதாகவும், அதற்கு ஆளுனர் தரப்பிலிருந்த பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கோறளைபற்று பிரதேச சபையின் பாதீட்டு கூட்டங்கள் என்ற பெயரில் இரண்டு முறையும் பெரும் அல்லோலகல்லோலம், மல்லுக்கட்டல், கட்டிப்பிடிப்புக்கள்தான் நடந்தன.
பாதீட்டை சூழ்ச்சிகரமாக நிறைவேற்ற தவிசாளர் முயன்றதால் பெரும் பிரளயமே வெடித்தது.
கடந்த 11.12.2020 முறைகேடாக நடந்த கூட்டத்தில் பாதீட்டை நிறைவேற்றியதாக தவிசாளரும் அவரது ஆதரவாளர்களும் அறிவித்தனர். எனினும், அது சட்டவிரோதமான செயற்பாடு என அப்பொழுதே எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் தரப்பால் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து கோறளைப்பற்று உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் பாதீட்டை நிறைவேற்றுவதில் பிடுங்குப்பாடு நிலவும் சபைகள் தொடர்பில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கிழக்கு மாகாண ஆளுனருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையில், கோறளைப்பற்று பிரதேசசபையினால் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் பாதீடு சட்டவிரோதமானது என்பதை கண்டறிந்து குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி ஆளுனர் தலைமையில் நடந்த கூட்டத்தில், கோறளைப்பற்று பிரதேசசபை உள்ளிட்ட சர்ச்சைக்குரிய சபைகளில், உரிய சட்டபூர்வ முறைமையின் கீழ் பாதீட்டை சமர்ப்பித்து, சபை அங்கீகாரம் பெற்று 31.12.2020 இற்கு முன்னராக அனுப்பி வைக்க அறிவித்தல் அனுப்புமாறு, உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.
கோறளைப்பற்று பிரதேசசபையில் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் வரவு செலவு திட்டம், சட்டவிரோதமானது. ஆகவே, முறையான அங்கீகாரம் பெற்று, டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வையுங்கள் என, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மூலம் 22.12.2020 ஆம் திகதியிட்ட EP14CLGBudjed2020 என்ற கடித தலைப்பின் மூலம் கோறளைப்பற்று பிரதேசபை தவிசாளருக்கு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
எனினும், கிழக்கு ஆளுனர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தலின்படி, டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
குறிப்பிட்ட அவகாசத்திற்குள் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாத சபை தலைவர்களின் பதவி வறிதாக்கப்படவுள்ளது. அந்தவகையில், கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளரும் பதவியை இழக்க வேண்டும்.
இதற்கான வர்த்தமானி தயாராகி வருவதாகவும், அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வர்த்தமானியில் கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளரின் பெயரை உள்ளடக்காமலிருக்க அதிகபட்ச முயற்சியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எடுப்பதாக அறிய முடிகிறது. இது தொடர்பில் கிழக்கு ஆளுனருடன், சிவநேசதுரை சந்திரகாந்தன் பேச்சு நடத்தியுள்ளதாக, அந்த கட்சியின் பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட சட்டபூர்வமற்ற தவிசாளராக மாறி வரும் கோறளைப்பற்று தவிசாளர் சோபா ரஞ்சித்தும் அதை பிரதேசசபைக்குள் கூறுவதாக ஊழியர்கள் தரப்பிலும் கூறப்படுகிறது.
“பிள்ளையான் அண்ணன், ஆளுநரிடம் இதைப்பற்றி கதைத்துவிட்டார். எல்லாம் சரி. என்னை யாரும் இனி அசைக்க முடியாது“ என கூறுகிறார் என ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
கிழக்கு மாகாண ஆளுனர்அநுராதா யகம்பத் தன்னை அரசியலில் தூய்மையானவராக அடிக்கடி குறிப்பிடுவார். அவரது சொல்லும், செயலும் ஒன்றா அல்லது, ஆளுந்தரப்புக்களின் செல்லப்பிள்ளையாக இருக்கும் வழக்கமான ஆளுனரா அவர் என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்து விடும்.