ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்)

2021-ம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை ஜோதிட ரத்னா இணுவை பஞ்சாட்சர சர்மா, சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய நான்கு ராசிகளை கணித்து வழங்கியுள்ளார்.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

01.01.2021 முதல் 30.06.2021 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படத் தொடங்கும். முக்கிய முடிவுகளைச் சரியாக எடுப்பீர்கள். வெளியூர், வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வரும். உங்கள் செயல் முறைகளில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவீர்கள்.

அடிக்கடி பயணங்களைச் செய்யவும் வாய்ப்புகள் ஏற்படும். சிலர் புதிய தொழிலில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிரிகளின் தொல்லை எதுவும் ஏற்படாது. பொருளாதாரம் படிப்படியாக உயரும். தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். குழந்தைகளையும் வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் எண்ணங்களைச் சரியாகப் புரிந்து கொண்டு தேவையான உதவிகளைச் செய்வார்கள்.

இழுபறியாக இருந்த வழக்குகளில் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள். உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தினர் மத்தியில் பெரும் புள்ளியாகத் தோற்றமளிப்பீர்கள்.

01.07.2021 முதல் 31.12.2021 வரை உள்ள காலகட்டத்தில் நண்பர்களுக்குள் இருந்த பிணக்குகளுக்கு சரியான தீர்வைக் காண்பீர்கள். உங்கள் புதிய முயற்சிகளைத் துணிவுடனும் தைரியத்துடனும் செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அனைவரும் உங்களைப் பாராட்டுவார்கள். வீட்டிலும் வெளியிலும் மதிப்பு மரியாதை உயரத் தொடங்கும். எதிர்பார்த்த வாய்ப்புகளும், பணவரவும் உண்டாகும். இன்முகத்துடன் பேசி உங்கள் காரியங்களைச் சாதகமாக்கி கொள்வீர்கள்.

நீண்ட நாளாக தடைப்பட்டிருந்த திருமணம் நடைபெறும். குழந்தைப் பேறு உண்டாகும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும். செய்தொழிலில் உங்கள் இலக்குகளைச் சரியாக எட்டி விடும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் இந்தப் புத்தாண்டில் முன்னேற்றப் பாதையில் பயணிப்பீர்கள். அலைச்சல் இல்லாமல் உங்கள் வேலைகளைச் சரியாக செய்து முடித்து விடுவீர்கள். சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வீண் பேச்சுகளால் வம்பு வழக்குகள் வரலாம். அதனால் மெüனம் சாதிப்பது பலவற்றுக்கும் நல்லது. சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைத்து விடும்.

வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளை விட்டுப் பிரிய நேரிடலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து சுமூக நிலைமை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும்.

விவசாயிகள் புதிய குத்தகைகளை நன்கு ஆலோசித்து எடுக்கவும். இதுவரை இல்லாத அளவுக்கு லாபங்களைக் காணலாம். குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். அனைத்து காரியங்களும் சில தடைகளுக்குப் பிறகு வெற்றி பெறும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களால் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிப்பார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கட்சியில் உங்கள் பெயர் பிரபலமாகும். புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள்.

கலைத்துறையினர் செய்தொழிலில் இருக்கும் போட்டிகளைத் திறம்பட சமாளிப்பார்கள். இந்த ஆண்டில் அதிக முயற்சிகளுக்குப் பிறகு சில புதிய ஒப்பந்தங்கள் கை வந்து சேரும்.

பெண்மணிகளுக்கு இந்தப் புத்தாண்டில் மனம் நிம்மதி அடையும். ஆன்மிக காரியங்களுக்காகச் செலவு செய்வீர்கள். குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா செல்ல வாய்ப்பு உண்டாகும். புதிய சொத்து வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். உற்றார் உறவினர்களுடன் உறவு மேன்மையடையும்.

மாணவமணிகள் எதையும் செயல்படுத்துவதற்கு முன்பு பலமுறை சிந்தியுங்கள். படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். உடற்பயிற்சிகளில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: ஸ்ரீ ராதாகிருஷ்ணரை வழிபட்டு வரவும்.

******

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

01.01.2021 முதல் 30.06.2021 வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் நெடுநாளைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மற்றவர்களுக்காக புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். சில காரியங்களில் முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும்.

உங்கள் செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் பலம், பலவீனம் இரண்டையும் சரியாகப் புரிந்துகொண்டு செயலாற்றுவீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

வீட்டிலும் வெளியிலும் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உயரும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடி வரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சிலர் அசையாச் சொத்துகளை வாங்குவார்கள். நெடுநாளாக விற்பனை ஆகாத அசையாச் சொத்துகளும் விற்பனையாகும். உடல் ஆரோக்கியம், மன வளம் இரண்டும் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள்.

01.07.2021 முதல் 31.12.2021 வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் புதிய முயற்சிகள் யாவும் நீங்கள் எதிர்பார்த்த வகையில் நன்மையாகவே அமையும். உங்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும். திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப காரியங்கள் இல்லத்தில் நடந்தேறும்.  அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகளும், உதவிகளும் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களையும் மதித்து நடந்து கொள்வீர்கள்.

வெளியில் கொடுத்திருந்த கடன்கள் வட்டியுடன் திரும்பக் கிடைக்கும். புனித யாத்திரை செல்வீர்கள். உடன் பிறந்தோரின் தேவைகளைப் புரிந்து அவர்கள் கேட்காமலேயே தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மேலும் மனதில் பட்டதை உடனுக்குடன் பேசாமல் யோசித்து, பக்குவமாகப் பேசுவீர்கள். சிறிய விஷயங்களைப் பெரிது படுத்த மாட்டீர்கள். நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்தப் புத்தாண்டில் அலுவலகத்தில் நிலவும் இறுக்கமான சூழ்நிலைகள் மாறும். உங்களின் அசாத்தியத் துணிச்சல் வேலைகளில் வெற்றிகளைத் தேடித் தரும். அலுவலக ரீதியான பயணங்களால் புதிய வேலைகளைக் கற்பீர்கள்.

வியாபாரிகள் புதிய வியாபார உத்திகளைப் பயன்படுத்தி சரியான இலக்குகளை எட்டுவீர்கள். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் தொய்வு இருக்காது. போட்டிகளைச் சமாளித்து வெற்றியடைவீர்கள். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.

விவசாயிகளுக்கு பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். வருமானம் நன்றாக இருப்பதால் பாசன வசதிகளைப் பெருக்குவீர்கள். உங்கள் நண்பர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். கால்நடைகளால் லாபம் உண்டாகும்.

அரசியல்வாதிகளின் செயல்பாடுகளுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். பெயரும் புகழும் உயரும். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் தைரியமும், செயல்பாடுகளும் திகைக்க வைக்கும் அளவுக்கு சிறப்பாக இருக்கும்.

கலைத்துறையினருக்கு சிறிய தடைகளுக்குப் பிறகே புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். உங்கள் செயல்களில் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டாலும், உங்கள் செல்வாக்கு குறையாது.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். வருமானம் சீராக இருக்கும். உற்றார் உறவினர்கள் இல்லத்திற்கு வருவார்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் பெருகும். ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் மதித்து நடப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: குரு  பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

******

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

01.01.2021 முதல் 30.06.2021 வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில் நல்ல நிலையை அடைவீர்கள். பணம் பலவகையிலும் வரத்தொடங்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். அதிக வட்டி கிடைக்கும் வகையில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள்.

உடன்பிறந்தவர்களின் பிரச்னையைத் தீர்த்து வைப்பீர்கள். செய்தொழிலை மேம்படுத்த புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். அரசாங்க அதிகாரிகளுக்கு நெருக்கமாக இருப்பீர்கள். இதனால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளும் சுலபமாகக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவீர்கள்.
01.07.2021 முதல் 31.12.2021 வரை உள்ள காலகட்டத்தில் எவரிடமும் விவாதம் செய்யாமல் “கொக்குக்கு ஒன்றே மதி’ என்கிற ரீதியில் காரியமாற்றுவீர்கள். வெற்றி இலக்கை நிர்ணயம் செய்துகொண்டு கடினமாக உழைப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

செய்தொழிலில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புகழ், கெüரவம் உயரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்துடன் திருத்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பொதுக் காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். முக்கிய விஷயங்களில் “வெட்டு ஒன்று; துண்டு இரண்டு’ என்கிற ரீதியில் சரியான முறையில் பேசுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும்.

இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். எதிர்பாராத இடங்களிலிருந்தும் தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுமையோடும், பொறுப்போடும் நடந்துகொண்டு செயலாற்றும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்தப் புத்தாண்டில் அலுவலகத்தில் இருக்கும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாவிட்டாலும், தற்காலிக தீர்வைக் காண்பீர்கள். அலுவலகத்தில் சற்று வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். கடினமாக உழைப்பீர்கள்.

வியாபாரிகள் புதிய சந்தைகளைத் தேடிப்பிடித்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடையும். இருந்தாலும் உங்கள் செயல்பாடுகளில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டிவரும்.

விவசாயிகள் புதிய கடன்களை வாங்கி விவசாயத்தை விரிவுபடுத்துவீர்கள். விளைச்சல் அதிகரிக்கும். அரசு மானியம் கிடைக்கும். கால்நடைகளாலும் லாபம் அதிகரிக்கும். நெருங்கியவர்களுக்கு உதவிகளைச் செய்து அவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்கள் அணுகுமுறையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். திட்டமிட்ட வேலைகளில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாகவே கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு உங்களுக்கு அதிகமாக இருக்கும். அதோடு உங்கள் முயற்சியை மற்றவர்கள் பாராட்டுவார்கள். வரவேண்டிய பணம் கை வந்து சேரும்.

பெண்மணிகள் உற்றார் உறவினர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருந்தாலும் யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்யுங்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும். இந்தப் புத்தாண்டில் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

மாணவமணிகளுக்கு படிப்பில் உற்சாகம் ஏற்படும். கஷ்டப்பட்டு படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். எளிமையான சில உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவீர்கள். பெற்றோரின் மனநிலையை அறிந்து நடந்து கொள்ளுங்கள்.

பரிகாரம்: ஸ்ரீ சீதாராமரை வழிபட்டு வரவும்.

******

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

01.01.2021 முதல் 30.06.2021 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் பெருமை, புகழ், செல்வாக்கு அனைத்தும் சிறப்பாக இருக்கும். இடைவிடாமல் சுறுசுறுப்பாக உழைப்பீர்கள். உங்கள் வேலையை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் சுயமாகச் செய்து முடித்து விடுவீர்கள்.

மிடுக்காக உலா வருவீர்கள். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். செய்தொழிலில் சிறப்பான வருமானத்தைக் காண்பீர்கள். எதிர்காலத்தை வளமாக்க சிறப்பான திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய யுக்தியுடன் எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். தொட்டதற்கெல்லாம் பயந்து கொண்டிருந்த மனோபாவம் மாறி, தைரியத்துடன் முடிவெடுப்பீர்கள்.

சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்ல “விசா’ கிடைக்கும். அதேநேரம் பெற்றோர் வழியில் சிறிது மருத்துவச் செலவுகளும் உண்டாகும். உடன் பிறந்தோருக்கும் உங்களால் ஆன உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். கடும் போட்டிக்கு இடையே உங்கள் பெயர் முக்கியமான பொறுப்புகளுக்கு பரிந்துரைக்கப்படும். கிடப்பில் கிடந்த நல்ல திட்டங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்.

01.07.2021 முதல் 31.12.2021 வரை உள்ள காலகட்டத்தில் மாறுபட்ட கருத்துடையோருடன் இணக்கமாக நடந்து கொள்வீர்கள். சிந்தித்து புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துகளில் இருந்து எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள்.

குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். குடும்பத்தினருடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். உற்றார் உறவினர்களுக்காக உங்கள் நேரத்தை சிறிது ஒதுக்குவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். உங்கள் உடல் ஆரோக்கியம், மன வளம் இரண்டும் பிரமாதமாக இருக்கும். வெளியூரிலிருந்து சுபச் செய்திகள் வரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களைப் பொருத்தவரை இப்புத்தாண்டில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளில் தானாகவே முன்வந்து உதவி புரிவார்கள். மூத்த அதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளைப் பரிவுடன் கவனிப்பார்கள். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வருமானம் சீராக இருக்கும். அலுவலகத்தில் முன்பிருந்த கெடுபிடிகள் குறையக் காண்பீர்கள்.

வியாபாரிகளின் கூட்டாளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். உங்கள் செல்வாக்கு உயரும். புதிய முதலீடுகளைச் செய்யாமல், விரைவில் விற்பனையாகும் பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வியாபாரம் செய்வீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக நடைபெறும். வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள்.

விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். புதிய குத்தகைகளை நாடிச் சென்று பெறுவீர்கள். லாபம் அதிகரிக்கும். விளைபொருள்களை புதிய சந்தைகளில் விற்பனை செய்ய முனைவீர்கள். கால்நடைகளுக்கு சிறிது செலவு உண்டாகும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கும்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். தொண்டர்களின் ஆதரவினால் சாதனைகளைச் செய்வீர்கள். புதிய பொறுப்புகளை ஏற்று கவனத்துடன் கையாளவும்.

கலைத்துறையினர் உங்கள் கடமைகளைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள். புகழைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சீரிய முயற்சிகளை எடுப்பீர்கள். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள பயிற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.

பெண்மணிகள் குடும்பத்தில் நற்பெயர் வாங்குவீர்கள். தொலை தூரத்திலிருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். குடும்ப விசேஷங்களுக்காக புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள்.

மாணவமணிகள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி சராசரிக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறுவீர்கள். ஆசிரியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here