யாழ் மாநகரசபையில் கடந்த இரண்டு வருடங்களாகவே தோற்கிறோம்; யாரிலும் தவறு காண முடியாது: கூட்டமைப்பின் ஒற்றுமையை வலியுறுத்துகிறார் த.சித்தார்த்தன்!

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பாதிப்பை ஏற்படுத்தும். எனினும், தமிழ் அரசு கட்சியே தனது உள்வீட்டு பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும். யாழ் மாநகரசபையில் இந்த வருடம் மட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தோல்வியடையவில்லை. கடந்த 2 வருடங்களாகவே வரவு செலவு திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. ஆகவே, யாரையும் குறை சொல்ல முடியாது. இந்த நிலைமையை உணர்ந்து, அனைவரும் கூட்டமைப்பாக ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தரப்புகளும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர் அமைப்புகளும் ஒன்றாக இணைந்து பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது. அனைத்து தரப்புகளும் அதில் ஒன்றிக்க முயற்சிக்கப்படுகிறது. அனைவரும் ஒன்நிணையா விட்டாலும் பெரும்பாலானவர்கள் ஒன்றிணைய வாய்ப்புள்ளது. பெரும்பாலான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் கையெழுத்திடுவார்கள் என நினைக்கின்றேன்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை கடந்த கால அரசுகள் நிறைவேற்றவில்லை. பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய கடந்த அரசே எதையும் செய்யவில்லை. இந்த அரசு எதையும் செய்யுமென எதிர்பார்க்க முடியாது. அதனால் வலுவான பிரேரணையொன்று அவசியம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இருக்கின்ற குழப்பங்கள் நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாதிக்கும். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனால் அவர்களுடைய குழப்பங்களை அவர்கள் நான் தீர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்குள் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதில் பங்காளி கட்சிகளும் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால் ஆனால் தங்களுடைய தலையீடுகள் இன்னும் குழப்பமாக அந்த பிரச்சினையை முடித்து விடலாம்.

நாங்கள் அவர்களின் குழப்பங்களில் தலையிடாமல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்துகிறோம்.

உதாரணமாக யாழ் மாநகரசபை முதல்வர் தெருவில் நாங்கள் எந்த தலையீடும் செய்யவில்லை. மாநகர சபை உறுப்பினர்கள் 16 பேரில் 13 பேர் ஆர்னோல்டையே முதல்வராக்க வேண்டும் என தெரிவித்தனர். அதனால் அவரை முதல்வராக்குவதற்கு எமது சம்மதத்தை தெரிவித்தோம்.

நீங்கள் உன்னிப்பாகக் கவனித்தால் இந்த மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு முறையும் வெற்றி பெறவில்லை. முதலாவது முறை முதல்வர் தெரிவின் போது ஈபிடிபியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் போட்டியிட்டன. இருவரும் சம அளவான வாக்குகளைப் பெற்றதனால் ஒருவர் விலக்கப்பட்டார். அப்பொழுது தமிழ் காங்கிரசின் ஆதரவை ஈபிடிபி கோரியது. காங்கிரஸ் ஆதரவு கிடைக்காத காரணத்தால் ஈபிடிபி போட்டியிலிருந்து விலகியது. அதன் பின்னர் நடந்த எல்லா வரவு செலவுத் திட்டங்களிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தோல்வியடைந்தது. இம்முறை மூன்றாவது பட்ஜெட்டில் தோல்வியடைந்துள்ளது.

உள்ளுராட்சி சட்டங்களின்படி மூன்றாவது முறையும் தோல்வியடைந்ததால் முதல்வர் பதவியை இழந்துள்ளார். யாழ் மாநகர சபையில் எப்போதுமே எங்களுக்கு பெரும்பான்மை இல்லை. பெரும்பான்மை இல்லாத நிலையில் இதுவரை அந்த சபையை கட்டுப்படுத்தியது பெரிய விஷயம். முன்னர் பிரிந்திருந்த தரப்புகள் இப்பொழுது ஒற்றுமை அடைந்திருக்கிறார்கள். மணிவண்ணன் கட்சியை விட்டு வெளியேறியது அதனை சாத்தியமாக்கியது.

இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குத்தான் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே அவர்களுடன் நிற்கின்றார்கள். மீதி 10 பேரும் மணிவண்னனுடன் இருக்கிறார்கள்.

மாநகரசபை முதல்வர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஏற்பட்ட பின்னடைவிற்கு யாரிலும் தவறு காண முடியாது. அதனால் இதையெல்லாம் மறந்து ஒற்றுமையாக முன் செல்ல வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு.

இரண்டு சபைகளை இழந்ததால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பின்னடைவு ஏற்பட்டிருக்குமென நான் நினைக்கவில்லை. மாநகரசபைக்கு முன்னரே பாராளுமன்ற தேர்தலில் நாம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளோம். அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here