‘ஒரு மாநகரைகூட ஆளத்தெரியாதவர்களிற்கு சமஷ்டி வேண்டிக் கிடக்கிறதாம்’: மணியின் நகர்வுகளால் கோட்டா அரசு குதூகலம்!

கையில் கிடைத்த ஒரு மாநகரசபை ஆட்சியையே நடத்த தெரியாத தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாணசபை முறைமை வேண்டும் என்று கோருவது வேடிக்கையானது என எள்ளிநகையாடியுள்ளார் கோட்டாபய அரசின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.

தமிழரசுகட்சியின் ஒரு குழு, ஈ.பி.டி.பி, மணிவண்ணன் குழுவின் முக்கூட்டு திரைமறைவு நடவடிக்கையில், அண்மையில் மாநகரசபை ஆட்சியை மணிவண்ணன் குழு கைப்பற்றியது. இந்த நிலைமையினால் கோட்டாபய அரசு மகிழ்ச்சியடைந்துள்ளது என்பதை, அதன் அமைச்சர் வீரசேகர எதிரொலித்துள்ளார்.

அவர் கூறுகையில்,

புதிய அரசியலமைப்பில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வை கோரி நிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், மாகாணசபை முறைமையிலானடிஅதிகாரப் பகிர்வையும் வேண்டி நிற்கின்றனர். இது இரண்டும் அறவே வேண்டாம் என்பதே எனது நிலைப்பாடு.

மாநகர சபையில் ஆட்சி நடத்தத் தெரியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை முறைமை வேண்டும் என்று கூறுவது வேடிக்கையானது.

வடக்கில் ஒரே ஒரு மாநகர சபை யாழ்ப்பாண மாநகர சபை. அந்த சபையை கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்குள் முட்டிமோதி மூன்று வருடங்கள் நிறைவடைவதற்கு அதை இழந்துள்ளனர். ஒரு மாநகர சபையையில் கூட ஒற்றுமையாக ஆட்சி நடத்தக் கூடிய பக்குவம் தமிழ் கூட்டமைப்பினர் இடமில்லை.

இதேவேளை கடந்த வடக்கு மாகாணசபை ஆட்சியிலும் அந்த சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சீரழித்தனர். அந்த மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் கூட்டமைப்பினரிடம் இருந்தபோதிலும் அவர்களுக்குள் ஒற்றுமை இருக்கவில்லை. ஒரு பக்கம் உப்புச்சப்பற்ற தீர்மானங்கள் நிறைவேற்றினர். மறுபக்கம் ஊழல் மோசடிகள் தலைவிரித்தாடின. இதுதான் கூட்டமைப்பின் ஆட்சியின் விசித்திரம்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையுடன் ஜனாதிபதி செய்யப்படுகிறார் எனில் புதிய புதிய அரசமைப்பில் மாகாணசபை முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதிகாரங்கள் அனைத்தும் மத்தியில் இருக்க வேண்டும். அதை ஒன்பது மாகாணங்களுக்கு பிரித்துக் கொடுத்தால் மத்தியில் ஆட்சி எதற்கு என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here