பொறுப்புணர்ந்து செயலாற்றுவோம்!

“எமது பொறுப்பினை உணர்ந்து செயலாற்றுவோம். பிறர் மீது சாட்டுதல் செய்யும் மனநிலையைக் கைவிடுவோம்” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற நீதித்துறை உத்தியோகத்தர்களின் புத்தாண்டு உறுதி உரை நிகழ்வில் தலைமை உரையாற்றிய போதே மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்களில் மேல் நீதிமன்ற நீதிபதி, நீதிபதிகள் உள்பட உத்தியோகத்தர்கள் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக இன்று காலை 9 மணிக்கு உறுதியுரை எடுத்தனர்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி விநாயகமூர்த்தி இராமக்கமலன், யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தேசியக் கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் ஜே.ஜெயரஞ்சன், கணக்காளர்  வி.ரதீஸ் மற்றும் உத்தியோகத்தர்கள் நீதிபதிகள் முன்னிலையில் உறுதியுரையை நிறைவேற்றினர்.

நாட்டில் தற்போது நிலவும் கோவிட் -19 நோய்த் தொற்று தொடர்பில் சிறப்புரை ஆற்றுவதற்காக  வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியின் அழைப்பின் பேரில் பங்கேற்றிருந்தார். அவர் கோவிட் – 19 தொற்றிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து கொள்ளும் நடைமுறைகள் பற்றி உரையாற்றினார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மற்றும் யாழ்ப்பாணம் தொழில் நியாய சபை ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here