பாகிஸ்தானில் வன்முறை கும்பலால் இந்துக் கோயில் இடித்து தரைமட்டம்!

பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் கரக் மாவட்டம் தெறி என்ற கிராமத்தில் இருந்த இந்து சமய கோயிலை முற்றுகையிட்ட கும்பல் ஒன்று அதற்கு தீயிட்டுக் கொளுத்தி, இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது.

அந்தக் கோயிலில் வாரந்தோறும் அப்பகுதியில் வசித்துவரும் இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர்.

தெறி கிராமத்துக்கு அருகே ஜமாத் உலேமா இ இஸ்லாம் எஃப் என்ற இஸ்லாமிய மதவாத கட்சி நேற்று பேரணி ஒன்றை நடத்தியது.

இந்த பேரணியின் போது கூடியிருந்தவர்களிடம் இந்துக்களின் கோயிலை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பேச்சை சிலர் ஒலிபெருக்கி மூலம் பேசியதாகக் கூறப்படுகிறது.

அப்போது பேரணியில் கலந்துகொண்டவர்களில் உணர்ச்சிவயப்பட்ட சிலர் இந்துக் கோயிலை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கும்பலாக கோவில் இருந்த பகுதிக்கு சென்றதுடன் அதற்குத் தீயிட்டுச் சிதைத்ததாகக் கூறப்படுகிறது.

கோயிலுக்கு தீவைத்து, இடித்துத் தள்ளுவதைக் காட்டும் காணொளி டுவிட்டரில் பகிரப்பட்டிருந்தது.

சம்பவம் நடந்து சில மணி நேரம் கழித்தே அந்தப் பகுதிக்கு போலிசார் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், ஜமாத் உலேமா இ இஸ்லாம் எஃப் அரசியல் கட்சியின் பேரணி குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் மௌலானா அதர் ரகுமான் தனது கட்சி பேரணிக்கும் கோயில் சிதைக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியதுடன் தாக்குதல் சம்பவத்திற்குக் கண்டனமும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here