ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்ற அறிவிப்பால் ஏற்பட்ட விரக்தியில், ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, ‘இப்போது இல்லனா வேற எப்பவும் இல்ல’ எனக் கூறிய நடிகர் ரஜினிகாந்த், வரும் டிசம்பர் 31ஆம் திகதி, ஜனவரியில் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்தார். இதனால், அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் குஷியடைந்தனர்.
அண்ணாத்த படப்பிடிப்பின் போது, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதனால், திட்டமிட்டபடி அரசியல் களத்தில் ரஜினிகாந்த் இறங்குவாரா என்று எதிர்பார்ப்பும், சந்தேகமும் எழுந்தது.
இதனிடையே, புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். இந்த அறிவிப்பை மிகுந்த மன வலியுடன் வெளியிட்டதாகவும், ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்து விட்டதாகக் கூறி, மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
அரசியல் கட்சியை ரஜினி தொடங்குவார் என்று பெரும் எதிர்பார்ப்பில் இருந்த அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை வெளியானதை தொடர்ந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டை நோக்கி, அவரது ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். முடிவை திரும்பப் பெறுமாறு கோஷங்களை எழுப்பி, அவரது வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.
மேலும், சமூக வலைதளங்களிலும் ரஜினிக்கு ஆதரவாகவும், எதிராகவும் அவரது ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் அருகே உள்ள பாணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்கமார் (34). கூலி வேலைக்கு சென்று வரும் அவர், சிறு வயது முதலே ரஜினியின் தீவிர ரசிகராவார். ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து அவர் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, ‘ரஜினிதான் என் வாழ்க்கை.. இதுவே என் கடைசி பதிவு’ என்ற பதிவை போட்டுவிட்டு, நண்பர்களுடன் புலம்பியபடி, நேற்று முன்தினம் இரவு தூங்கச் சென்றுள்ளார். இதையடுத்து, மறுநாள் அவர் படுக்கையிலேயே உயிரிழந்து கிடந்தார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ராஜ்குமாரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.