அவுஸ்திரேலியாவில் விபத்திற்குள்ளாகி உயிராபத்தான நிலையிலிருந்த இலங்கை தமிழ் அகதி இளைஞன் ஒருவர், அந்த நாட்டு பொலிசாரால் வான்வழியாக மீட்கப்பட்டுள்ளார்.
விக்டோரியாவின் மேற்குப் பகுதியிலுள்ள கோலாக்-லாவர்ஸ் ஹில் (Colac-Lavers Hill) வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது காணாமல்போயிருந்தார்.
கடந்த 26ஆம் திகதி டெலாஹே பகுதியைச் சேர்ந்த 30 வயதான இந்நபரும் அவரது நண்பரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்றுகொண்டிருந்ததாகவும் இரவு 7.40 மணியளவில் இருவரும் வெவ்வேறாக பிரிந்துள்ளனர்.
நீண்டநேரமாகியும் தனது நண்பர் குறிப்பிட்ட இடமொன்றிற்கு வராததையடுத்து அச்சமடைந்த சக நண்பர் அவசர சேவைகள் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வான் மற்றும் தரை வழியாக தேடுதல் நடத்திய பொலிஸாரும் அவசர சேவைப் பிரிவினரும் சுமார் 15 மணிநேரங்கள் கழித்து குறித்த இளைஞரைக் கண்டுபிடித்தனர்.
வீதியோரம் இருந்த தடுப்பொன்றில் மோதி விபத்துக்குள்ளாகி ஆபத்தானநிலையில் இருந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பொலிஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.