கிழக்கு மாகாணத்தில் 1,058 கொரோனா தொற்றாளர்கள்!

கிழக்கில் கொரனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் கல்முனை சுகாதார பிராந்திய சுகாதார திணைக்களத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள ஆறு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

காத்தான்குடி பகுதியில் நேற்று 13பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மூன்று தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் 1058 பேர் கொரனா தொற்றுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 12மணித்தியாலங்களுக்குள் கிழக்கு மாகாணத்தில் 41 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் கோமரகடவில பகுதியில் ஒருவர், கல்முனை வடக்கு பகுதியில் மூன்றுபேர், கல்முனை தெற்கில் 26 பேர், சாய்ந்தமருது, காரைதீவு,சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் ஒருவரும், காத்தான்குடி பகுதியில் நான்கு பேரும், வெல்லாவெளி பகுதியில் ஒருவரும், ஆரையம்பதியில் ஒருவர், அம்பாறை தமண பகுதியில் ஒருவருமாக 41 தொற்றாளர்கள் 12மணித்தியாலங்களுக்குள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியில் திருகோணமலை மாவட்டத்தில் 126ஆக அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 138 ஆக அதிரித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 794 ஆகவும் அதிகரித்துள்ளது. பேலியகொட மீன்சந்தை கொத்தனிக்கு பின்னர் இன்றுவரையில் உள்ள எண்ணிக்கையாக இவையுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தலைமையின் கீழ் நேற்று பொலிஸார் மற்றும் இராணுவத்துடன் இணைந்து கல்முனை பொதுச்சந்தையில் திடீர் என மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக 27பேர் அன்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்றுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டனர். அப்பகுதியில் பலர் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் அகன்று சென்றதன் காரணமாக பலர் சோதனைக்குட்படுத்த முடியாமல் சென்றது.

இதன் காரணமாகவும் கல்முனை பிராந்தியத்தில் பல பகுதிகளில் தொற்றுக்கள் காணப்படுவதன் காரணமாகவும் அன்டிஜன் பரிசோதனைகளை திட்டமிட்ட வகையில் நடாத்த முடியாத காரணத்தினாலும் தொற்றுக்கள் மேலும் பரவலாம் என்ற அடிப்படையிலும் சில கலந்துரையாடல்களின் பிற்பாடு கல்முனையில் இருக்கின்ற 01,02,03ஆம் கிராம சேவையாளர் பிரிவுகளும் அதனுடன் இணைந்திருக்கின்ற உப பகுதிகளும் கல்முனைகுடி பகுதியில் உள்ள 01,02,03ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளும் அடங்கலாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக சுகாதார திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது எவ்வளவு காலத்திற்கு செல்லும் என்பது அங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் அடிப்படையிலும் தொற்றின் தாக்கம் குறைந்து செல்லும் அவதானிப்பின் அடிப்படையிலும் தனிமைப்படுத்தல் அகற்றப்படும். இவையனைத்தும் அங்குள்ள மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இதனை தீர்மானிக்கின்ற காரணியாக அமையும்.

இதேபோன்று மட்டக்களப்பு, பெரியகல்லாறு பகுதியிலும் எண்ணிகைகள் சடுதியாக அதிகரித்துச் சென்ற நிலையில் நேற்று எங்களால் மேற்கொள்ளப்பட்ட 100 அன்டிஜன் பரிசோதனைகளில் எந்தவிதமான மேலதிக தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை.

அதேநேரம் காத்தான்குடி பகுதியில் நேற்று 200 அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் சில காரணங்களினால் அது மட்டுப்படுத்தப்பட்டு 13பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டிருந்தது. அதில் மூன்று நபர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தொற்றின் தாக்கத்தின் உண்மைத் தன்மையினை காத்தான்குடி பிரதேசத்தில் அறிய முடியவில்லை. தொற்றின் தாக்கம் இவ்வாறு செல்லும் பட்சத்தில் தாக்கம் அதிகரிக்கும் நிலையேற்படும்.

இன்று காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியிடம் அதற்குரிய விசேட செயற்றிட்டங்களை மேற்கொண்டு அன்டிஜன் பரிசோதனைகளை அதிகரிக்க பணிக்கப்பட்டுள்ளது. அன்டிஜன் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிக்கும் பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பும் காத்தான்குடியும் நெருங்கிய தொடர்புகொண்ட பகுதிகள். இதன் தாக்கம் மேலும் பரவுவதை தடுப்பதற்காகவும் இந்த தொற்று எவ்வாறு பரவுகின்றது என்பதன் தன்மையினை அறிந்து அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இதேபோன்று திருகோணமலை மாவட்டத்தில் திருமலை நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தற்போதும் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது. முருகாபுரி, ஜின்னா நகர், அபயபுர ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாகவுள்ளன. அங்கு தொற்றின் தாக்கம் தொடர்பிலும் அதனை தடுக்கின்ற செயற்பாடுகளையும் முன்னெடுத்துவருகின்றோம். மூதூர் பகுதியிலும் தொற்றுகள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.

யுத்த காலத்தில் அடையாள அட்டை எங்களுக்கு எவ்வளவு முக்கியமானதோ அதனைவிட முக்கியமானதாக அனைவரும் முககவசம் அணிவது முக்கியமாகும். முககவசங்கள் சரியான முறையில் அணியவேண்டும். வெளியில் செல்லும்போது பலர் நாடியில்தான் முககவசங்கள் அணிகின்றனர். சரியான முறையில் முக கவசங்களை அணிய வேண்டும்.

முகத்தின் மூன்று பகுதிகள் கொரனா கிருமிகள் உடலுக்குள் செல்லும் மூன்று பிரதான காரணியாக அமைகின்றன. கண்,மூக்கு,வாய் ஆகியவற்றினை கைகளால் தொடுகின்ற பழக்க வழக்கங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சமூக மற்றும் தனிநபர் இடைவெளிகளை நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும். இன்று சமூக இடைவெளிகளும் தனிநபர் இடைவெளிகளும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. சமூக இடைவெளி அதிகரிக்கும்போது தொற்றின் தாக்கம் குறைவடையும்.

தேக ஆரோக்கியமாக இருந்தாலும் கிருமிகளை உள்வாங்கிய போதிலும் உங்களுக்கு அதன் அறிகுறி தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்களின் குடும்பத்தினர், வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த தொற்றினை வழங்கும் சந்தர்ப்பத்தினை உருவாக்கிக் கொள்கின்றீர்கள். எங்களால் வழங்கப்படும் சுகாதார நடைமுறைகளை மிகவும் காத்திரமாகவும் மிகவும் பொறுப்புடனும் அனைவரையும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here