தென்னாபிரிக்காவின் இரும்புப் பிடியில் இலங்கை!

செஞ்சூரியனில் நடந்து வரும் முதலாவது டெஸ்டில் தென்னாபிரிக்காவின் இரும்புப் பிடியில் சிக்கியுள்ளது இலங்கை.

இதில் முதலில் ஆடிய இலங்கை அணி 396 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா 2வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 317 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3வது நாளான நேற்றும் தென்னாபிரிக்க வீரர்களின் ஆதிக்கம் நீடித்தது.

10வது சதத்தை பூர்த்தி செய்த மூத்த வீரர் பொப் டு பிளிஸ்சிஸ் தனது முதலாவது இரட்டை சதத்தை நெருங்கி துரதிர்ஷ்டவசமாக ஒரு ரன்னில் நழுவ விட்டார். அவர் 199 ரன்களில் (276 பந்து, 24 பவுண்டரி) கட்ச் ஆகினார். பவுமா (71), கேஷவ் மகராஜ் (73) அரைசதம் அடித்து வலுவான ஸ்கோருக்கு வித்திட்டனர். தேனீர் இடைவேளைக்கு பிறகு தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 621 ரன்கள் குவித்து சகல விக்கெட்டையும் இழந்தது.

முதலாவது டெஸ்டில் ஆடிய ஹசரங்க 4 விக்கெட் வீழ்த்தினார்.

இலங்கைக்கு எதிராக தென்னாபிரிக்க அணி 600 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் முறையாகும். அத்துடன் செஞ்சூரியன் மைதானத்தின் அதிகபட்சமாகவும் இது பதிவானது.

225 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. சந்திமால் 21, குசல் ஜனித் பெரேரா 33 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here