உள்ளூராட்சி ஆசன பங்கீட்டில் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கும் (ரெலோ) இடையில் இழுபறி உச்சமடைந்துள்ளது.
நல்லூர் பிரதேசசபை தமக்கு வழங்க வேண்டுமென ரெலோவினர் வலியுறுத்தி வந்தனர். கட்சி தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் நேற்று இதனை வலியுறுத்தினார். ஆனால் யாழ்ப்பாணம் வந்து நிலைமையை அறிந்த பின்னர் அவர், நேற்று இரவின் பின்னர் சுருதியை குறைத்து விட்டார்.
நல்லூரில் ரெலோ சார்பில், அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேனினால் தவிசாளராக நியமிக்க முயற்சிக்கப்படும் மதுசுதன் மீது ஏராளம் முறைப்பாடுகள் இருப்பதை நேரடியாக அறிந்த பின்னர், செல்வம் அடைக்கலநாதன் தனது சுருதியை குறைத்து விட்டார்.
எனினும், சுரேன் தலைமையிலான தரப்பினர் தமது முயற்சியில் விடாப்பிடியாக உள்ளனர்.
நல்லூர் பிரதேசசபைக்கும், வலி கிழக்கு பிரதேசசபைக்கும் தவிசாளர் நியமித்த போது, தமிழ் அரசு கட்சிக்கும், ரெலோவிற்குமிடையில் இணக்கப்பாடு இருந்தது. முதல் பாதி காலத்தை ஆட்சி செய்யும் தரப்பு, மறு தரப்பிற்கு விட்டுக் கொடுக்க வேண்டுமென்பது இணக்கப்பாடு.
இந்த இணக்கப்பாட்டை சுட்டிக்காட்டியே, நல்லூரில் தமது பங்கை ரெலோ கேட்கிறது.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், நல்லூரில் பங்கை கேட்கும் ரெலோ, வலிகிழக்கில் பங்கை விட்டுக் கொடுக்கவில்லை.
வலி கிழக்கை பற்றி பேசாமல், நல்லூர் தமக்கு வேண்டுமென ரெலோ மல்லுக்கட்ட, கோப்பால் தொகுதி தமிழ் அரசு கட்சி கச்சேரியை ஆரம்பித்துள்ளது. தமக்கு வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் தேவையென வலியுறுத்த ஆரம்பித்துள்ளது.
கோப்பாய் தொகுதி தமிழ் அரசு கட்சி கிளை கூடி,“பேச்சு பேச்சாயிருக்கணும்“ என இந்த முடிவை எடுத்துள்ளது. அத்துடன், தமது கோரிக்கையை எழுத்து மூலம் கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.
அதிகம் ஆசைப்பட்டதால் ரெலோ இப்பொழுது சிக்கியுள்ளது.