புதுக்குடியிருப்பு மக்களிற்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு: விசுவமடு, உடையார்கட்டு சந்தைகளும் ஆபத்தில்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எழுமாறாக நடத்தப்பட்ட பி சிஆர் பரிசோதனையில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார் .

புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியை சேர்ந்த மரக்கறி மொத்த வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தயக்கமின்றி உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவர் தம்புள்ள பகுதிக்கு சென்று மரக்கறிகளை பெற்று வந்து புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, விசுவமடு சந்தை வியாபாரிகளுக்கு வழங்கும் நபர் என முதல்கட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது

இன்று இரவு பிசிஆர் முடிவுகள் கிடைக்கும் வரை இவர் நடமாடியுள்ளார். இதனால் புதுக்குடியிருப்பு பகுதி அபாய வலயமாகுமா என மக்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ளது. இன்று முடிவுகள் வெளியாகிய நிலையில் குறித்த நபரின் வீட்டுக்குள் நபர் முடக்கப்பட்டு இரானுவம் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு சுகாதார அதிகாரிகள் குறித்த நபர் நடமாடிய இடங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டு சற்று முன்னர் அவர் கிளிநொச்சி கிருஷ்ணாபுரத்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு நோயாளர் காவுவண்டியில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தரான அவர், புதுக்குடியிருப்பு கைவேலியிலுள்ள பாரதி சாமி ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று மாலை கழற்றியுள்ளார். இன்று அங்கு மண்டல பூசை நடந்தது. அங்கு பெருமளவு ஐயப்ப பக்தர்கள் ஒன்று கூடியுள்ளனர். சுமார் 130 பேர் வரையில் அங்கு ஒன்றுகூடியதாக, ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்ற ஒருவர் தெரிவித்தார்.

அவர் புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, விசுவமடு சந்தை வியாபாரிகளுக்கு மரக்கறிகளை வழங்கி வந்துள்ளார். எனவே குறித்த நபருடன் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரியிடம் அல்லது புதுக்குடியிருப்பு போலீசாரிடம் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறும் இதனால் இது பாரிய சமூக தொற்றாக பரவுவதை தடுக்க முடியும் எனவும் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் முகமாக பொலிசார் ஒலிபெருக்கி மூலமாக அறிவுறுத்தலை வழங்கி வருகின்றனர். மறு அறிவித்தல் வரை ஆலயங்களில் வழிபாடுகளை நிறுத்துமாறும் மக்கள் ஒன்றுகூடும் இடங்களை தவிர்க்குமாறும் போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here