அபாய வலயமாகியது புதுக்குடியிருப்பு: எழுமாற்றான சோதனையில் ஒருவருக்கு கொரோனா!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எழுமாற்றாக நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியானது. யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று 416 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதில் புதுக்குடியிருப்பு வாசி கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

புதுக்குடியிருப்பு, கோம்பாவில் கிராமத்தை சேர்ந்த ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தம்புள்ளவிற்கு சென்று மரக்கறிகளை பெற்று வருபவர்.

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தம்புள்ளவிற்கு செல்பவர்கள் உள்ளிட்ட சிலரிடம் அண்மையில் எழுமாற்றாக பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டது. எழுமாற்றாக பெற்றமையால், மாதிரிகள் பெறப்பட்ட யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.

இப்படி, மாதிரி பெறப்பட்ட ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று மாலை பிசிஆர் முடிவுகள் கிடைக்கும் வரை அந்த நபர் சமூகத்தில் நடமாடினார். இதனால் புதுக்குடியிருப்பு பகுதி அபாய வலயமாகியுள்ளது.

அவர் இன்று மாலை கொரோனா சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதுடன், அவர் சென்று வந்த இடங்கள் பற்றிய தகவல்களை பெறும் நடவடிக்கைகள் இப்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here