ஊடக அடக்குமுறைக்கு தமிழ் தேசிய கட்சி கடுமையான கண்டனம்!

உதயன் பத்திரிகைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமைக்கு தமிழ் தேசிய கட்சி கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

அந்த கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில்-

யாழ்ப்பாணத்தில் இருந்துவெளிவரும் உதயன் செய்திப் பத்திரிகைக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் பொலீஸ் தரப்பினால் வழக்கு தொடரப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கின்றது.

பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் கடந்த 41 வருட காலக்கட்டத்தில், நினைவுக்கு எட்டிய வரையில் ,செய்தி ஊடகம் ஒன்றுக்கு எதிராக, இந்தசட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்டிருக்கும் முதல் வழக்கு இதுவாகும்.

நடந்து முடிந்தபோரில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளன்று பிரசுரிக்கப்பட்ட செய்தி தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடுப்பதற்கு சட்ட அடிப்படை எதுவும் கிடையாது என்று திட்டவட்டமாக கூற முடியும்.

இந்த விவகாரத்தில், பயங்கரவாத தடைச்சட்டம் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்பதனை அழுத்திக் கூற விரும்புகின்றோம்.

ஜனநாயக ஆட்சி அமைப்பின் நான்கு தூண்களில் ஒன்றாக மதிக்கப்படும் ஊடகத் துறையின் சுதந்திரமான செயற்பாட்டிற்கு எதிரான சட்ட நடவடிக்கை என்பது, அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், ஜனநாயகத்தை நேசிக்கும் சகலராலும் தீவிரமாக எதிர்க்கப்பட்டே ஆக வேண்டும்.

அரசின் சார்பில் நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் சகல வழக்கு நடவடிக்கைகள் தொடர்பிலும் தீர்மானம் மேற்கொள்ளும் உச்ச அதிகாரம் கொண்டவராக சட்டமா அதிபர் விளங்குகின்றார்.

எனவே, ஊடக சுதந்திரம் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தவழக்கின் சட்டபூர்வ தன்மை தொடர்பில் பரிசீலிக்கவும், முடிவு எடுக்கவும் சட்டமா அதிபர் முன்வர வேண்டும்.

அதற்கு ஏதுவாக, இந்த வழக்கினை சட்டமா அதிபரின் கவனத்திற்கு உரியமுறையில் கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்.

இன்று உதயன் என்றால் நாளை வேறு எந்த ஊடகம்? என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது என்பதை, தமிழ் ஊடகங்கள் மாத்திரமன்றி, சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களும் சிந்தித்து பார்க்க முன்வர வேண்டும் என்பதையும் இச் சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here