அருள் பணி ஜேம்ஸ் பத்திநாதனின் திருவுருவச்சிலை திறப்பு

2004 ம் ஆண்டு டிசம்பர் 26 அன்று நாட்டில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தும் காணாமல் போயும் இருந்தனர் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தால் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சுமார் 3000 பேருக்கு அதிகமானவர்கள் உயிரிழந்து பலர் காணாமல் போயும் இருந்தனர்.

உயிரிழப்புகள் மாத்திரமின்றி பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிவடைந்த இந்த துன்பியல் நிகழ்வான ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்று 16 ஆண்டுகள் கடந்துள்ளன. இவ்வாறு பதினாறு ஆண்டுகளை கடந்துள்ள போதிலும் உயிரிழந்த தங்களுடைய உறவுகளை நிணைந்து நாடளாவிய ரீதியில் வருடம் தோறும் இந்த ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்திருக்கின்ற சுனாமி நினைவாலய வளாகத்தில் இன்று காலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை விசேட வழிபாடுகள் இடம் பெற்றதோடு அங்கு உயிரிழந்தவர்களின் உறவுகள் பலர் கலந்து கொண்டு தமது உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து சுனாமி நினைவாலய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அருள் பணி ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களது உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது.

சுனாமி ஏற்பட்ட காலப்பகுதியில் முல்லைத்தீவில் பங்குத்தந்தையாக இருந்த அருள் பணி ஜேம்ஸ் பத்திநாதன் அவர்கள் மாவட்ட மக்களுக்காக அரும்பாடுபட்டு சேவையாற்றினார். இந்நிலையில் ஆழிப்பேரலையின் போது மட்டுமின்றி யுத்த காலத்திலும் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக அயராது சேவையாற்றி கடந்த 11-07-2019 அன்று சுகயீனம் காரணமாக உயிரிழந்திருந்த அருள் பணி ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களது உருவச்சிலை சுனாமி நினைவாலய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு இருந்தது.

முல்லைத்தீவு பங்குத்தந்தை அருள்பணி அருளானந்தம் யாவிஸ் அடிகளார் அவர்களது தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அருள் பணி ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களது சகோதரி அவர்களால் சிலை திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டதை தொடர்ந்து யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் அவர்களால் நினைவுக்கல் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக சுகாதார நடைமுறைகளை பேணி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here