2004 ம் ஆண்டு டிசம்பர் 26 அன்று நாட்டில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தும் காணாமல் போயும் இருந்தனர் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து அரசினால் குறித்த தினத்தை தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தி 2005 ம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் குறித்த தினத்தில் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் எதிர்காலத்தில் இவ்வறான இயற்கை அனர்த்தங்களின் இருந்து விடுபடும் முகமாக விழிப்புணர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது
அந்தவகையில் இன்று ஆழிப்பேரலை ஏற்பாட்டு 16 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் இடம்பெற்றது
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் இ.இலிங்கேஸ்வரகுமார் சர்வமத தலைவர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் கிராம அலுவலர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் அகவணக்கம் இடம்பெற்றதை தொடர்ந்து கணுக்கேணி கற்பக விநாயகர் ஆலய சிவசிறீ ச.சத்தியேந்திரா குருக்கள் முல்லைத்தீவு பங்குத்தந்தை அருள்பணி அருளானந்தம் யாவிஸ் அடிகளார் முல்லைத்தீவு பள்ளிவாசல் மௌலவி எஸ் எம் ஸாஹிர் ஆகியோர் ஆசியுரைகள் நிகழ்த்தினார். தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களது உரையும் அதனை தொடர்ந்து எதிர்காலத்தில் மாவட்டத்தில் ஆழிப்பேரலையை எதிர்கொள்ள செய்யப்பட்டிருக்கின்ற வேலைத்திட்டங்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் இ.இலிங்கேஸ்வரகுமார் தெளிவுபடுத்தினார்.