பிரபாகரன்தான் ஒரே தலைவர்: சம்பந்தன் … நோ கொமண்ட்ஸ்!

0

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் மனம் விட்டுப் பேச வேண்டும் என தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கருத்து தெரிவிக்கையி தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.

தொடா்ந்தும் அவா் கருத்து தெரிவிக்கையில்- தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டமையினால் தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியை இழந்து விட்டது.

அபிவிருத்தியும் அரசியல் உரிமையும் நம் இரு கண்கள். அதனை எதற்காகவும் விட்டுக் கொடுக்கவியலாது. தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் மாகாண சபையையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்தார்கள்.

ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இரா.சம்மந்தனும், சி.வி.விக்னேஸ்வரனும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இருவரும் முதலில் மனம் விட் டுப்பேசவேண்டும். இந்த இருவரில் அவர் சரியானவர், இவர் பிழையானவர் என நான் கூறவரவில்லை.

இருவருமே மனம் விட்டுப்பேசி தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படவேண்டும். மேலும் தந்தை செல்வா போன்றவர்கள் அகிம்சை வழியில் போராடினார்கள் பின்னர் புலிகள் ஆயுத வழியில் போராடினார்கள் இப்போது சம்மந்தன் சர்வதேச ஆதரவுடன் போராடி வருகிறார்.

அதேசமயம் நான் தமிழ் மக்களின் அபிலாஷைகளை சிங்கள மக்களிடம் கொண்டு செல்கிறேன். இந்த அரசாங்கம் புலிகள் இருந்த காலத்தில் ஈழம் தவிர எல்லாம் தருகிறோம் என்றார்கள்.

இன்று எதுவும் தரமாட்டோம் என்கிறார்கள். ஆகவே தான் நண்பன் ரவிராஜ் வழியில் இதனை நான் செய்கிறேன்.

தந்தை செல்வாவின் காலத்தில் உள்நாட்டில் ஒப்பந்தங்கள் செய்து, அதன் ஊடாக சிங்கள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனப்பிரச்சனை தீர்விற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. ஆனால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சிங்கள தலைவர்களால் தந்தை செல்வா ஏமாற்றப்பட்டார். இறுதியில்- தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என கூறி மறைந்தார்.

பின்னர் அமிர்தலிங்கம் பதவியேற்று, இந்தியாவை முழுமனதாக நம்பி, அந்த நாட்டின் துணையுடன் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினார். அந்த முயற்சி துரதிஸ்டவசமாக கைநழுவி போயிருந்தது. இந்திய, இலங்கை ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் இன்றும் இலங்கை அரசியலமைப்பில் அதிகாரபரவலாக்கல் என்ற வகையில் உள்ள ஒரேயொரு சட்டவிதி 13வது திருத்த சட்டம்தான். அது முழுமையாக அமுல்படுத்தப்படாவிட்டாலும், ஒரு சட்டவிதியாக இருந்து கொண்டிருக்கிறது.

இதன்பின் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமைதாங்கினார். அவரது ஆயுத வழியினூடாகத்தான் ஈழத்தமிழர் பிரச்சனை உலகெங்கும் அறிவிப்பு செய்யப்பட்டது. ஈழத்தமிழர் பிரச்சனையை உலகெங்கும் கொண்டு சென்றதில் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்தான் வெற்றிபெற்றார். இருப்பினும் தமிழீழ விடுதலைப்புலிகளால் இலக்கை அடைய முடியவில்லை. போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.

இப்போது இரா.சம்பந்தன் இந்தியாவையும் தாண்டி ஐ.நா சபை வரை சென்றுவிட்டார் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண. சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் தீர்வுகாணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது முயற்சிகள் எந்தளவு வெற்றியடையுமென நான் கருத்துகூற விரும்பவில்லை என்றார்.