“நண்பனே! இனி இனம் பார்த்து பழகு, களம் பார்த்து கால் வை”: வைகோ பெற்ற அறிவுரை

தானும் வைகோவும் கருணாநிதியால் வளர்க்கப்பட்டவர்கள் என, திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியுள்ளார்.

பெரியார் பிறந்த நாள் விழா, அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா – வைகோவின் பொது வாழ்வு பொன் விழா என, மதிமுக சார்பாக இன்று (சனிக்கிழமை) முப்பெரும் விழா மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது.

இதில், மத்திய பாஜக அரசு மற்றும் அதன் கைப்பாவையாக இயங்கி வருகின்ற அதிமுக அரசு இரண்டையும் வீழ்த்துவதற்கு திமுகவின் தலைமையில், தோழமைக் கட்சிகளுடன் அணி சேர்ந்து, மதிமுக தனது அரசியல் கடமைகளை மேற்கொள்ளும் என தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. மேலும், பொதுவாழ்வில் பொன்விழா கண்ட வைகோவுக்கு பாராட்டு தீர்மானம் உட்பட 35 தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இதுதவிர, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் திமுக பொருளாளர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, துரைமுருகன், கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

மாநாட்டில் பேசிய துரைமுருகன், “நானும் வைகோவும் கருணாநிதியால் வளர்க்கப்பட்டவர்கள். அவரால் விலாசம் பெற்றவர்கள் நாங்கள். எந்த உயரத்தில் பறந்தாலும் கருணாநிதி என்ற சக்தி எங்கள் இதயத்தில் இருப்பதால் தான் எங்களால் அரசியலில் இருக்க முடிகிறது. நண்பனே இனி இனம் பார்த்து பழகு, களம் பார்த்து கால் வை” என பேசினார்.

மேலும், அரசியலுக்கு அப்பாற்பட்டு தானும் வைகோவும் நட்பு பாராட்டுவதாக துரைமுருகன் தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here