தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையிலுள்ள யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் நாளை (16) இரண்டாவது முறையாக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
முதல்வர் இ.ஆனோல்ட்டின் தலைவிதி எப்படி அமையுமென்பதை தெரிந்து கொள்ள நாளை வரை பொறுத்திருக்க வேண்டும். எனினும், வரவு செலவு திட்டம் முதல்முறை சமர்ப்பித்த போது, ஏற்பட்ட நிலைமையில் மாற்றம் இருக்குமென்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை தென்படவில்லை.
இதனால், ஆனோல்ட் அனேகமாக பதவியை இழக்க வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.
மாநகரசபை தேர்தல் முடிந்த கையுடன் ஆனோல்டை கையைப்பிடித்து அழைத்துச் சென்று, முதல்வர் பதவியில் உட்கார வைத்திருந்தார். எனினும், பொதுத்தேர்தல் சமயத்தில் சுமந்திரன் முகாமிலிருந்து அவர் வெளியேறி விட்டார். இதனால், ஆனோல்ட்டை காப்பாற்ற சுமந்திரன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
மறுவளமாக, அண்மைக்காலமாக சுமந்திரனுடன் நெருக்கம் பாராட்டும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சவரணபவனை காப்பாற்ற, மட்டக்களப்பிற்கே சென்றார்.
ஏனைய சபைகளை விட யாழ் மாநகரசபை கள நிலவரமும் சிக்கலானது. இரண்டு பிரதான கட்சிகள் பலமாக- ஆனோல்ட்டை எதிர்க்கிறார்கள். மாநகரசபை ஆட்சியமையும் தருணத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சபையை கைப்பற்றினால் வளர்ந்து விடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கொடுத்த கயிறை டக்ளஸ் நன்றாக விழுங்கி விட்டார். முன்னணி பலமடைய கூடாது என்ற பொதுநோக்கம் இரண்டு தரப்பிற்கும் இருந்ததால், ஆனோல்டை ஆதரிக்கும் முடிவை ஈ.பி.டி.பி எடுத்தது.
பின்னர், ஈ.பி.டி.பியிடம் ஆதரவு கேட்கவேயில்லையென கூட்டமைப்பு சொல்லிவிட்டது.
இப்பொழுது இன்னொரு முதல்வரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு இல்லையென்ற அடிப்படையில், ஈ.பி.டி.பியும், முன்னணி எடுக்கும் எதிர்ப்பு நிலைப்பாட்டையே எடுக்கும்.
இந்த நிலைமையில், எதிரணி உறுப்பினர்களை வளைத்துப் போடும் கடைசிக்கட்ட முயற்சியில் ஆனோல்ட் இறங்கியுள்ளார்.
யாழ் மாநகரசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் வீடு தேடிச் சென்று கொண்டிருக்கிறார் ஆனோல்ட். தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி, சுதந்திரக்கட்சி, ஐ.தே.க என அனேகமான எதிரணியினரின் வீட்டுக்கு செல்கிறார். அவர்கள் சம்மதிக்கும் வரை, வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க வேண்டுமென நச்சரித்தபடியே இருப்பதாக தகவல்.
வரவு செலவு திட்டம் வரை ஆனோல்ட்டின் கண்ணில் படாமல் ஒளிந்து திரிவதாக ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.