பாலியல் குறைபாடுகள்: ஏமாற்றும் விளம்பரங்கள்

ஆண்மைக் குறைபாடுகள் அத்தனையும் தங்களால் தீர்க்க முடியும் என்று வாக்களித்து இவர்கள் தங்களது பிசினஸை மேம்படுத்திக் கொள்ள அத்தனை வகையான விளம்பரங்களையும் செய்கின்றனர். எனவே, விளம்பரங்களை நம்பி ஏமாந்துவிடக்கூடாது.

பாலியல் குறைபாடுகளை முதலில் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பாலியல் சார்ந்த குறைபாடுகளில் 90 சதவீதம் மனம் சார்ந்த தொந்தரவுகளே. மீதமிருக்கும் 10 சதவீதத்தினருக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. உடல் ரீதியாக அவர்களுக்கு இருக்கும் வேறு பிரச்சனைகள் கூடப் பாலியல் குறைபாட்டுக்குக் காரணம் ஆகலாம்.

வீரியமின்மை, விந்து விரைவாக வெளியேறுதல், விந்தணுக்களின் தரமும் எண்ணிக்கையும் குறைதல் ஆகியவற்றை முறையான மருத்துவர்களிடம் விவாதிப்பது முக்கியம். பயிற்சி, அனுபவம் மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவர்களின் ஆலோசனை மூலம் பாலியல் குறைபாடுகளை சரி செய்துவிடலாம்.

பாலியல் பிரச்சனைக்கு மன ரீதியான காரணங்கள் இல்லாமல் உடல் ரீதியான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் அதனை ஆய்ந்து அறிவது மருத்துவரின் கடமை. காரணம் தெரியாமல் குத்துமதிப்பாக சில மருந்துகளை சாப்பிடச் சொல்லும் போலி மருத்துவர்களின் செயல் கண்டிக்கத்தக்கது.

பாலியல் சார்ந்த விஷயங்களை வெளிப்படைத் தன்மையுடன் பேசமுடியாத சூழலே போலிகள் உருவாவதற்கு முக்கியக் காரணமாகவும் உள்ளது.

காதல், காமம் இரண்டையும் ‘அடச்சீ’ என்று பார்க்கும் மனப்பான்மையை தகர்த்தெரியும் சூழலை உருவாக்க வேண்டும். செக்ஸ் என்ற சொல்லே இங்கு கெட்ட வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது. செக்ஸ் என்பதும் இயல்பான செயல்பாடே என்பதைப் புரிந்து கொள்வதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என்பது கேள்விக்குறியாகவே தொடர்கிறது.

குழந்தையின்றித் தவிக்கும் பெண்களை இந்த சமுதாயம் பலவிதமாகவும் வசை பாடுகிறது. இந்தச் சூழ்நிலையை வைத்தே வணிகம் செய்து பணம் சம்பாதிக்கும் ஆசாமிகள் இங்கு அதிகம் உள்ளனர். குழந்தைக்காக ஏங்கும் கணவனின் கடினமான மனநிலையும், மனைவியின் மன அழுத்தத்தையும் பணமாக மாற்றும் வித்தையை போலி மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பாலியல் குறைபாடுகளுக்கு நிச்சயமாக இயற்கை மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உண்டு. ஆனால், சரியான மருத்துவரைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பதிவு பெற்ற அல்லது பாரம்பரிய முறைப்படி நெடுநாளாக மருத்துவம் பார்த்து வரும் தகுதி வாய்ந்த மருத்துவர்களைத் தேர்வு செய்வது அவசியம்.

அதிக பணம் செலவழித்து விளம்பரம் தேடும் போலி மருத்துவர்களை எந்தக் காரணம் கொண்டும் நம்ப வேண்டாம், விளம்பரத்துக்காக செலவழித்த பணத்தை உங்களிடம்தான் வசூலிக்கப் போகிறார்கள்.

ஐந்து ரூபாய் மதிப்புள்ள மருந்தை ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்கும் வித்தகர்கள் இங்கு அதிகம். பாலியல் சார்ந்த குறைபாடுகள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து நிவர்த்தி செய்யக் கூடிய கொடிய வியாதியல்ல. செலவில்லாமல் செய்யக் கூடிய மனமாற்றம் மட்டுமே. பாலியல் பற்றிய சந்தேகங்களை வெளிப்படையாக விவாதியுங்கள்.

பள்ளிப் பருவத்திலும், கல்லூரிப் பருவத்திலும் பாலியல் தொடர்பான சந்தேகங்களை பேசிப் புரிந்து கொள்ள சரியான மருத்துவரிடம் ஆலோசனை பெற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம். திருமண வாழ்வில் கணவன் மனைவி இடையில் அன்புப் பரிமாற்றத்தில் மனத்தடைகள் இன்றி இருங்கள்.

ஒருவரது குறையை மற்றவர் பெரிது படுத்தத்தேவையில்லை. பாலியல் தொடர்பான சிறு பிரச்சனைகளுக்கு உங்கள் குடும்ப மருத்துவரிடம் விவாதிக்கலாம். தேவைப்பட்டால் அதற்கான சிறப்பு மருத்துவரை அணுகலாம். பாரம்பரிய உணவு, உடலுழைப்பு, மனமகிழ்ச்சியும் ஆரோக்கியமான தாம்பத்யத்துக்கு வழிவகுக்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here