நடுநிலை வகிக்க ஈ.பி.ஆர்.எல்.எவ் சம்மதம்: பெட்டி கைமாறாமல் இருக்க கூட்டமைப்பு பிரார்த்தனை!

வவுனியா நகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைப்பது குறித்த பேச்சுக்கள் இன்று மாலையுடன் நிச்சமற்ற நிலையில் முடிவடைந்துள்ளன. வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிப்பதென தமிழர் விடுதலை கூட்டணி (சிவசக்தி ஆனந்தன் தரப்பு) உறுதியளித்துள்ளது.

இன்று மாலை வவுனியா பிரமுகர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் பிரதிகள் கலந்து கொண்ட சந்திப்பு நடந்தது. இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பு வாக்குறுதியை பொதுஅமைப்புக்கள் வெளியிட்டனர்.

இதேவேளை, தமிழ் பக்கத்தில் நேற்றும், நேற்று முன்தினமும் வெளியிட்ட செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்த “தேர்ட் பார்ட்டி“ ஆட்கள் இவர்கள்தான். சிவசக்தி ஆனந்தன் விதிக்காத சில நிபந்தனைகளை இவர்களே விதித்து, கூட்டமைப்பிடம் சம்மதம் பெற்று, அந்த சம்மதங்களை சிவசக்தி ஆனந்தன் தரப்பிடம் கூறி, அவர்களை சமரசப்படுத்தும் உத்தியை இவர்கள் கையாண்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதில்லை, நடுநிலை வகிப்பதென்றுதான் சிவசக்தி ஆனந்தன் தரப்பு ஆரம்பத்தில் நிலைப்பாடு எடுத்திருந்தது. எனினும், பொது அமைப்புக்களின் தலையீட்டையடுத்தே, பேச்சில் ஈடுபட்டனர்.

இதன்போது, சில உடனடி சாத்தியமில்லாத நிபந்தனைகளை சிவசக்தி ஆனந்தன் தரப்பு விதித்திருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும், கொள்கை வரைபு உருவாக்க வேண்டும், வவுனியா நகரசபை விவகாரத்தில் எழுத்துமூல உடன்பாடு தேவையென சிவசக்தி ஆனந்தன் நிபந்தனைகள் விதித்திருந்தார். இப்படியான உடன்பாட்டிற்கு செல்ல முடியாதென மாவை சேனாதிராசா உடனடியாக மறுத்திருந்தார்.

இதன்பின், கூட்டமைப்பின் இரண்டு பங்காளிக்கட்சிகளின் தலைவர்களையாவது வவுனியாவிற்கு அழைத்து, சிவசக்தி ஆனந்தன் தரப்புடன் நேரடியாக பேச வைக்க, ப.சத்திலிங்கம் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டார். எனினும், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் அந்த சந்திப்பை தவிர்த்து விட்டனர். இன்று கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் இரண்டாம் மட்ட தலைவர்கள்தான் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, வவுனியா நகரசபையை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டுமென்பதற்காக ரிசாட் பதியுதீன் தரப்பு பெருமளவு பணத்தை வீசியெறிகிறது. ரிசாட் தரப்பு நிச்சயம் ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்கு தூதுவிட்டிருக்கலாமென்ற அபிப்பிராயமும் கூட்டமைப்பின் தலைவர்களிடம் உள்ளது. சில நாட்களின் முன்னர் மன்னார் உள்ளூராட்சிசபையொன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பதாக இறுதிவரை உறுதியளித்து வந்த, தமிழர் விடுதலை கூட்டணியினர் இறுதிநேரத்தில் காலைவாரி, ஐ.தே.கவை (ரிசாட் தரப்பு) ஆதரவளித்திருந்தனர். இந்த மாற்றத்தின் பின்னால் பேரம்பேசல்கள் இருந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

இதேபோன்ற ஒரு நிலைமை வவுனியா நகரசபையிலும் ஏற்படலாமென்ற எச்சரிக்கையுணர்வும் கூட்டமைப்பின் தலைவர்களிடம் உள்ளது. கூட்டமைப்பின் தலைவர்களை பேச்சுக்கு அழைத்தோம், அவர்கள் வரவில்லையென்ற தோற்றத்தை உருவாக்கவே அதிகளவு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதோ தெரியவில்லையென்ற ஊகமும் அவர்களிடம் உள்ளது.

எதுஎப்படியோ வவுனியா நகரசபையை ஐ.தே.க கைப்பற்றுவது வடக்கின் எல்லையை வவுனியாவிலிருந்து பின்நகர்த்த வேண்டிய மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்துமென்பதே உண்மை.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here