வெளியில் தலைகாட்டவே முடியவில்லை- சிறிதரன் வேதனை: கொறடா பேச்சு வந்ததும் கூட்டத்தை விட்டு ‘எஸ்கேப்’!

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்போது, மூன்று விடயங்கள் ஆராயப்பட்டன. புதிய அரசியலமைப்பிற்கான பரிந்துரை, வரவு செலவு திட்ட வாக்களிப்பில் எடுக்கும் நிலைப்பாடு, வரவு செலவு திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீடு தொடர்பான வாக்களிப்பு ஆகியவை பற்றி ஆராயப்பட்டது.

முன்னதாக, பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ரெலோ வாக்களித்தது சரியான முடிவு என சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அது சரியான நடவடிக்கை என இரா.சம்பந்தனும் தெரிவித்தார்.

இது, சிறிதரனிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அன்று ரெலோ எதிர்த்து வாக்களிக்கவிருந்தது தனக்கு தெரியாது, ரெலோ எதிர்த்து வாக்களித்த நிலையில் தான் வாக்களிக்காமல் விட்டது பற்றி வெளியில் ஆட்களும், பத்திரிகைகளும் கேள்வி கேட்கிறார்கள். என்னால் வெளியில் தலைகாட்ட முடியாமலுள்ளது என உரத்த குரலில் எகிறி குதித்தார்.

நாடாளுமன்றத்திற்குள் தாம் பல முறை பேச முயன்றும் சிறிதரன் உள்ளிட்ட தமிழ் அரசுகட்சியினர் முகத்தை திருப்பிக் கொண்டு போனதை ரெலோ தரப்பில் சுட்டிக்காட்டினர். “முகம் கொடுத்து பேசினால் கொறடா பதவி, பேச்சாளர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டுமென நீங்கள் நினைத்து, எம்முடன் பேசுவதை தவிர்த்தீர்கள். ஆனால் நாம் பேச முயன்றது அந்த பதவிகளிற்கு அல்ல. வாக்களிப்பு தொடர்பாகவே“ என ரெலோ தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து, “எல்லாமே சரியான நடடிக்கைதான்“ என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

அவர் எதை சரியென குறிப்பிடுகிறார் என சிறிதரன் கேட்டார். ரெலோ எதிர்த்து வாக்களித்ததும், நீர் வாக்களிக்காமல் விட்டதும்-இரண்டும் சரிதான். பாதுகாப்பு அமைச்சின் வாக்கெடுப்பின் போது கூட்டமைப்பின் தரப்பில் ரெலோ இருந்தது. அவர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். நீங்கள் (தமிழ் அரசு கட்சியினர்) இருக்கவில்லை. தெரியாதென்கிறீர்கள். தெரியாமல் எப்படி வாக்களிப்பில் கலந்து கொள்வது? அதனால் நீர் செய்ததும் சரிதான் என சிறிதனை சமாளித்தார் சம்பந்தன்.

புதிய அரசியலமைப்புக்கான வரைபு சமஷ்டி அடிப்படையிலானதாக தயாரிக்கப்படவதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார். சட்டத்தரணி கனகஈஸ்வரனினால் அது தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் உள்ளடக்கங்கள் பற்றி 19,20ஆம் திகதிகளி் ஆராய தீர்மானிக்கப்பட்டது.

வரவு செலவு திட்ட வாக்களிப்பில் கலந்து கொள்தில்லையென தீர்மானிக்கப்பட்டது.

இந்த விடயங்கள் பேசி முடிந்ததும், ரெலோ தரப்பில் வினோ நோகராதலிங்கம்- “அந்த கொறடா, பேச்சாளர் விவகாரம்“ என கூறினார். சம்பந்தர் அதை சரியாக புரியாமல், வினோ நோகராதலிங்கம் இருந்த பக்கம் திரும்பி பார்த்து, மீண்டும் கேட்டு புரிந்த விட்டு, அதைப்பற்றி பேச கதிரையில் ஆசுவாசப்படுத்தி விட்டு பார்த்தார்- எதிரே இருந்த தமிழ் அரசு கட்சிக்காரர்கள் 5 பேரும் “ஏம்மா மின்னலு“ போல மறைந்து விட்டார்கள்.

கொறடா, பேச்சாளர் விவகாரம் எடுக்கப்பட போகிறது என்றதும் தற்போதைய கொறடா சிறிதரன் முதலாவதாக சட்டென எழுந்து வெளியில் சென்றார். ஏனைய நால்வரும் அவரை பின்தொடர்ந்தனர்.

இதையடுத்து, வரும்  19ஆம் திகதி இந்த விடயம் பேசுவதென முடிவானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here